அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்
அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) விரைவில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு (ஜி.எஸ்.டி.என்.) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து வணிகர்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஜனவரி 4-ந்தேதி முதல் இப்பதிவை மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்ய தற்காலிக ‘ஐ.டி.’ மற்றும் ‘பாஸ்வேர்டு’ வணிகர்களுக்கு மின் அஞ்சல் (இமெயில்) மற்றும் வணிகவரித்துறை இணையதளம் https://ctd.tn.gov.in மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
வணிகர்கள் இந்த தற்காலிக ‘ஐ.டி.’ மற்றும் ‘பாஸ்வேர்டுடன்’ இணைய தளத்தை உபயோகப்படுத்தி இந்த பதிவை மேற்கொண்டு வருகிறார்கள். ஜி.எஸ்.டி. பதிவு செய்யும் இணையதளம் தற்காலிகமாக மே 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு அனைத்து பதிவு பெற்ற வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இணையும் வசதி, நாடு முழுவதும் 15-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
தமிழ்நாடு வணிகவரித்துறையில் பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தங்களது ‘டிஜிட்டல் சிக்னேச்சர் சாட்டிபிகேட்’ (டி.எஸ்.சி.) பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்கள் என்றால் ஆதார் எண் உதவியுடன் மின் கையெழுத்து இட்டு பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்த பெரும்பாலான வணிகர்கள் மின் கையெழுத்துடன் பதிவு செய்யவில்லை. எனவே, அனைத்து வணிகர்களும் உடனடியாக ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.