திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு எந்திர சோதனை நடக்கும்: தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு சோதனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு எந்திர சோதனை நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக அரசியல் கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட மனுவை உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு எந்திர சோதனை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் வாக்குப்பதிவு சோதனைக்காக 14 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அண்மையில் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜனதா வெற்றிபெற்றதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அதுமட்டுமல்லாமல் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன்புபோல தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்று அடித்துக் கூறியது.
வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில கட்சிகள் வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கலாம். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியும் தலா 3 பேரை நியமித்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *