தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம்: முதல்வர் எடப்பாடி பேச்சு

தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் 62 ஆயிரத்து 738 கோடி முதலீட்டில் 61 திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.
தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் 3வது தென்மண்டல மாநாடு சென்னை அடையாளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த மாநாட்டில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தொழில்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், துணைத்தலைவர் தினேஷ் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–
இன்று நடைபெறும் இந்திய தொழில் கூட்டமைப்பின் மூன்றாவது தென்மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொழில் துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக திகழச் செய்ய வேண்டுமென்ற ஜெயலலிதாவின் சீரிய கொள்கையின்படி இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
2015–ம் ஆண்டில், செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில், உலகமே பாராட்டும் வகையில், தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு, புரட்சித்தலைவி அம்மாவால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதை அனைவரும் அறிவோம். இந்த மாநாட்டினை செம்மையான முறையில் நடத்திட சிஐஐ ஆற்றிய அரும்பங்கினை நான் இத்தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.
தகவல் தொழில் நுட்பம், உற்பத்தித் துறை மற்றும் சேவைத்துறை என அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியினை காணும் வகையில் முதலீட்டுக்கு தேவையான ஓர் உகந்த சூழல், தமிழகத்தில் எப்போதும் திகழ்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியினை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புரட்சித்தலைவி அம்மா வகுத்துத் தந்த ‘‘விஷன் 2023″ என்ற தொலைநோக்குத் திட்டம், பல்வேறு துறைகளில், நமது மாநிலம் எய்த வேண்டிய இலக்குகளையும், செயல்படுத்த வேண்டிய திட்டங்களையும் மிகத் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது.
இணைந்து செயல்படுவோம்
இந்த இலக்குகளை எய்தவும், நீண்ட நாள் வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்லவும், அரசுடன் இங்கு வருகை புரிந்துள்ள உங்களைப்போன்ற தொழில் நிறுவனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில் இன்று நடைபெறும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்தருணத்தில், புரட்சித்தலைவி அம்மா 2001 ல் தொடங்கிவைத்த ‘கனெக்ட்’ (Connect) என்ற தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த கருத்தரங்கை தமிழ்நாடு அரசும், சிஐஐயும் இணைந்து கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தொழில்துறையில் பல முக்கிய செயல் திட்டங்களை, தமிழ்நாடு அரசு தற்போது வகுத்து வருகிறது. மாறி வரும் உலக பொருளாதார சூழ்நிலைகளுக்கேற்ப, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் தொழில் தொடங்கிட, ஏற்கனவே உள்ள உகந்த சூழ்நிலையை மேலும் எளிமைபடுத்தும் வகையில், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும். அது மட்டுமன்றி, தேவைப்படின், இதற்கு ஏற்ற சட்டங்களும் இயற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
3வது இடம்
தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சான்றாக, மத்திய அரசு தேசியப் பயனுறு பொருளாதார ஆய்வுக் குழு வெளியிட்ட மாநில முதலீட்டு உள்ளாற்றல் குறியீட்டு அறிக்கையின்படி, நடுத்தர முதலீட்டு முடிவுகளில், அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அறிக்கை, தொழிலாளர் எண்ணிக்கை, தரம், திறன், உள்கட்டமைப்பு வசதிகள், மாநிலத்தின் பொருளாதார சூழ்நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை, ஆளுமை, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம், தொழில் நிறுவனங்களின் உணர்வுகள் ஆகியவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
தொழில் கொள்கைகளை வகுப்பதில் புரட்சித்தலைவி அம்மா ஏனைய மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்தவர். கடந்த 2014–ம் ஆண்டில், தொழில் கொள்கை, தானியங்கி மற்றும் தானியங்கி உதிரிபாகங்களுக்கான தொழில் கொள்கை மற்றும் உயிரி தொழில் நுட்பக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
வான்வெளி பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் சுமார் 267 ஏக்கர் பரப்பளவில் வான்வெளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என்பதையும், இத்திட்டம் தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் அடுத்த கட்டமாக, விரைவில் புதிய வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை வெளியிடப்படவுள்ளது.
தமிழகத்தின் மிக சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், அதாவது சிறப்பான சாலை வசதி, நான்கு பெரிய துறைமுகங்கள், 20 சிறிய துறைமுகங்கள், 7 விமான நிலையங்கள் மற்றும் தடையில்லா தரமான மின்சாரம் ஆகியவை தமிழ்நாட்டினை எப்போதுமே முதலீட்டுற்கு உகந்த மாநிலமாக திகழ வைத்துள்ளது. மேலும், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில், மதுரை தூத்துக்குடி தொழிற் பெருவழிச்சாலை திட்டம்” ஒன்றினைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்குத் தேவையான நில எடுப்பு இரண்டு மாவட்டங்களில் நிறைவுபெற்றுள்ளது என்பதையும் மன நிறைவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு வரும் புதிய தொழில் முதலீடுகள், துவங்கப்படும் புதிய நிறுவனங்கள் குறித்த ஒரு சிறந்த அளவுகோல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறையினால் வழங்கப்பட்ட தொழில் துவங்குவதற்கான அனுமதி ஆகும். மே, 2011 முதல் மே, 2017 வரை இத்துறையினால் வழங்கப்பட்ட அனுமதி 15,671 ஆகும். அதுமட்டுமல்லாமல், 2011 முதல் 2017ம் ஆண்டு வரை, தமிழகத்தில் அளிக்கப்பட்ட புதிய உயர் அழுத்த மின் இணைப்புகள் 2,472 ஆகும்.
ரூ.1.26 லட்சம் கோடி
அன்னிய முதலீடு
மேற்கண்ட கால கட்டத்தில், தமிழகம் ஈர்த்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 1,25,970 கோடி ரூபாய் ஆகும். மே, 2011 முதல் டிசம்பர் 2016 வரையிலான காலத்தில், மாநிலம் ஈர்த்த அந்நிய நேரடி முதலீட்டு வளர்ச்சி விகிதம், 263 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2011 முதல் 2017 வரை தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்ட முதலீடு 3,07,457 கோடி ரூபாய். இது மட்டுமன்றி, மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து விசாகப்பட்டினம் சென்னை தூத்துக்குடி கன்னியாகுமரி வரை ஒரு தொழிற் பெருவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொருளாதார மாற்றம்
இந்த திட்டங்கள் செயலாக்கத்திற்கு வரும்பொழுது தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மிகப்பெரிய பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும் என்பது உறுதி.
உலக முதலீட்டாளர் மாநாட்டில், கையொப்பமிடப்பட்ட ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ரூ.62,738 கோடி மதிப்பிலான 61 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 76,777 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தும் உன்னிப்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவைகள் விரைந்து செயலாக்கத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த உலக முதலீட்டாளர் மாநாட்டினை 2018–ம் ஆண்டில் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான கொள்கை அளவிலான மாற்றங்கள், புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தொழில் துவங்கி நடத்தும் சூழ்நிலையை எளிமைப்படுத்துதல், மனிதவள மேம்பாட்டிற்கு மேலும் முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றினை இந்த அரசு தொடர்ந்து செய்யும் என்றும், இந்த பணியினைச் செயல்படுத்துவதற்கு, தொழில் முனைவோர் மற்றும் சிஐஐ போன்ற தொழில் கூட்டமைப்புகளின் ஒத்துழைப்பினை நான் இத்தருணத்தில் கோருகிறேன். நாம் இணைந்து செயலாற்றும் பொழுது, நமது மாநிலம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து வேகமாக பயணிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
இந்த நல்ல வாய்ப்பினை எனக்கு நல்கிய சிஐஐ அமைப்பின் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாக பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவும், நிகழ்ச்சியின் பலன் நமது மாநிலத்திற்கு கிடைக்கவும், எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *