காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதி உதவி
வழி தவறி ஊருக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்த குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.17.77 லட்சத்திற்கான காசோலையினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வழங்கினார்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டம் குறிச்சி மற்றும் வெள்ளலூர் கிராமத்தில் எதிர்பாராதவிதமாக காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் உயிரிழந்தவர்களின் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.17.77 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவிக்கையில்,
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி மற்றும் வெள்ளளுர் ஆகிய பகுதிகளில் 2–ந் தேதி காலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் 7 பேர் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த காயத்ரி (12), நாகரத்தினம் (50), ஜோதிமணி (68), பழனிச்சாமி (73), ஆகிய 4 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 4 லட்சமும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு தலா 59,100–-ம் என மொத்தம் ரூ.17.77 லட்சத்திற்கான காசோலை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. கடுமையான வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டிலிருந்து வழித்தவறி ஒற்றை யானை ஊருக்குள் வந்துள்ளது.
இச்சம்பவமானது எதிர்பாராத விதமாக நடைபெற்றுள்ளது. வனத்துறையின் மூலம் இரவு முழுவதும் தினந்தோறும் காட்டு விலங்குகள் காட்டிலிருந்து வெளியே வராத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாடிவாயல் யானைகள் முகாமிலிருந்து வரவழைக்கப்பட்ட பாரி என்ற கும்கி யானையின் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி காட்டுயானை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த காட்டு யானையினை டாப்சிலிப் வரக்கடி யானைகள் முகாமிற்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில்,
கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகளிலிருந்து வன விலங்குகள் ஊருக்குள் புகாத அளவிற்கு அகழிகள் தோண்டப்பட்டுள்ளது. மேலும், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் மற்றும் எந்த வித வன விலங்குகள் புகாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து வெள்ளனூர் பகுதியில் காட்டு யானையை கும்கி யானை உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் யானை தாக்கி காயமடைந்தவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளலூரை சேர்ந்த நாகராஜனை நோில் பார்வையிட்டு சரியான முறையில் விரைவில் குணமடையும் வகையில் சிகிச்சைகள் மேற்கொள்ளுமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் மு.அர்ஜுனன், எட்டிமடை எ.சண்முகம், மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், மண்டல முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் காவல்துறை, வனத்துறை, வருவாய்துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.