புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி: 9–ந் தேதி எடப்பாடி திறந்து வைக்கிறார் இந்த ஆண்டில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்ப்பு
பத்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று திறந்து வைக்கிறார்.
10 கோடி ரூபாய் செலவில் 13 மருத்துவமனைகளில் கட்டணமில்லா கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் விரைவில் துவக்கப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அம்மாவின் அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு உறுதி பூண்டுள்ளது. இதனடிப்படையில் அம்மா புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய மருத்துவ குழுமத்தின் விதிகளுக்கு உட்பட்டு பத்தே மாதங்களில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் வரலாற்று சாதனையாக கட்டி முடிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் 150 மாணவர் சேர்க்கைக்கு தயார் நிலையில் உள்ளது.
இம்மருத்துவக் கல்லூரியினை திறப்பதற்கான ஆயத்த பணிகள் குறித்து அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர்,
புரட்சித் தலைவி அம்மா ஆணைக்கிணங்க புதுக்கோட்டையில் பத்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி வரும் 9–ந் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியால் திறந்து வைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கூறும் பொழுது, தமிழ்நாட்டில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக இதுவரை தனியார் மருத்துவமனைகளையே அதிக பொருட்செலவில் மக்கள் நாடி வந்தனர். ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மாவின் அரசு தமிழ்நாட்டில் விரைவில் 10 கோடி ரூபாய் செலவில் 13 அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லா கருத்தரிப்பு சிகிச்சை மையங்களை அமைக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே. வைரமுத்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாரதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.