ஜி.எஸ்.டி சட்டம் குறித்த 15-வது கவுன்சில் கூட்டம்: டெல்லியில் நடைபெறுகிறது
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதவுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது.
ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலாகிறது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். பல மாநிலங்கள், அதை நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் இதற்காக சட்டசபை கூட்டவில்லை.
இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கு கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது. இதில், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என, நான்கு வித வரிகள் உள்ளன.
முன்னதாக கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற 14-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், 1,200 பொருட்கள், 500க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு, வரி நிர்ணயித்தது.
ஜி.எஸ்.டி சட்டம் குறித்த 15-வது கவுன்சில் கூட்டம் அருண்ஜெட்லி தலைமையில் இன்று நடை பெறுகிறது.