ஆட்சிக்கு வரலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஆட்சிக்கு வரலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் நாகை மாவட்ட அண்ணா தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கழக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தலைமை தாங்கினார்.  முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம் வரவேற்றார். முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் விஜயபாலன் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
அண்ணா தி.மு.க. தொண்டர்கள் 100க்கு 100 சதவீதம் நம்முடைய பக்கம் தான் உள்ளனர். ஆனால் 122 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் ஆட்சியை நகர்த்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுக்கொண்டு அந்த நம்பிக்கையில் உள்ளனர். ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இந்த கட்சி சென்றுவிடக்கூடாது என்று எண்ணி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் கட்சியை கொண்டு செல்லவில்லை. அதைத்தான் நாம் கூறுகிறோம். ஆனால் நமது அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றாமல் இணைவோம் என்று ஒரு பொய்யை மெய்யாக கூறுகிறார்கள். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. மக்கள் தான் எஜமானர்கள். நல்ல தீர்ப்பை அவர்கள் வழங்குவார்கள்.
இணையுமா?
ஜெயலலிதா 74 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ. மூலம் உரிய நீதி விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். ஆனால் அதை இந்த  அரசு செய்ய முன்வரவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் இது மக்கள் புரட்சியாக வெடிக்கும். உங்கள் ஆட்சி வீட்டுக்கு போகும். ஜெயலலிதா மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியதால் தான் தமிழர்களின் நெஞ்சில் இன்றும் தெய்வமாக வாழ்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். அதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டும். அதுவரை எங்கள் தர்ம யுத்தம் தொடரும். நமது அடிப்படை கோரிக்கை சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர்கள் அதை விடுத்துவிட்டு இணைவோம் என்று தவறான தகவலை விதைக்கிறார்கள்.
ஸ்டாலின் கனவு
தேர்தல் ஆணையம் விரைவில் நல்ல தீர்ப்பை வழங்கும். அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம், இரட்டை இலை சின்னம் நம்மிடம் வந்து சேரும். உண்மையான அண்ணா தி.மு.க. நாம் தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கும். அதன் பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்.  தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழக மக்களின் எதிர்பார்ப்பை, உரிமையை நிறைவேற்றவில்லை. காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நீதிமன்றம் மூலம் நமது உரிமையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. இலங்கையில் போர் நடந்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி, மத்திய அரசிலும் அங்கம் வகித்தார். ஆனால் போர் நிறுத்தத்துக்காக எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. மு.க.ஸ்டாலின் காண்பது பகல் கனவு. அதை அண்ணா தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி முறியடிக்கும். சசிகலாவை பொதுச்செயலாளராகவோ, முதலமைச்சராகவோ ஆக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஒருபோதும் கூறியது இல்லை. மக்கள் ஆதரவோடு, பெண்கள் ஆதரவோடு தர்மயுத்தம் வெல்லும். ஜெயலலிதா ஆட்சி அமையும். அதை தமிழக மக்கள் நடத்திக்காட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *