ஆன்லைன் மூலம் செவிலியர்கள் பணி இடமாறுதல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
செவிலியர்களுக்கான பணி மாறுதல் ஆன்லைன் மூலம் இனி நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, அண்ணா நகரில் அமைந்துள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இயற்கை முறையில் உடல் பருமனை குறைக்கும் சிறப்பு சிகிச்சை முறை தொடக்க விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–அம்மாவினால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நியமனத்திற்காக மருத்துவப் பணியார் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. இத்தேர்வு வாரியம் மூலம் இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நியமனங்கள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு வரலாற்று நிகழ்வாக 9990 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் அவர் கூறும் பொழுது செவிலியர்கள் பணிமாறுதலானது இதுவரை பொது கலந்தாய்வு மூலம் நடைபெற்றது. இனி வரும் காலங்களில் செவிலியர்கள் பணிமாறுதல் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மிகுந்த வெளிப்படையான முறையில் நடத்தப்படும். இதற்கான திட்டமிடல் பணிகள் வேகமாக முடிக்கப்படும்.
இம்முறையில் நிரந்தர செவிலியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள் நிலை 1 மற்றும் நிலை 2 என அனைவருக்கும் பொருந்தும் என தெரிவித்தார். ஆன்லைன் முறை கலந்தாய்வு அனைத்து செவிலியர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.