பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே நம் முன் உள்ள சவால்: ஸ்டாலின்
பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே நம் முன் உள்ள சவால் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் பேசியதாவது
”19 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பில் இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி. 48 ஆண்டுகள் திமுகவை அவர் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். தேர்தல்களில் தோல்வியடையாத ஒரு தலைவரை இந்தியா பார்த்ததில்லை. 13 தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் இந்தியாவில் கருணாநிதி மட்டுமே. இந்திரா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல பிரதமர்கள் உருவாக காரணமாக இருந்தவர் அவர்.
கருணாநிதிக்கு தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரை மேடைக்கு அழைத்து வர முடியவில்லை. வைரவிழா மேடையில் கருணாநிதி இல்லாதது அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. அவருக்கு மட்டும் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிராக முதல் ஆளாக குரல் கொடுத்திருப்பார்.
நாட்டை காவிமயமாக்க காய்களை நகர்த்தி வருகிறது பாஜக. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் திமுக தலையாட்டாது. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே நம் முன் உள்ள சவால்.
இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த இயக்கம், மதச்சார்பற்ற அரசியலைக் கடைபிடிக்கும் இயக்கம்தான் திமுக. நாட்டின் பல பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு பதிலளிக்கும் விதமாக வைரவிழா அமைந்திருக்கிறது. இன்னொரு சுதந்திர போராட்டத்தை சந்திக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்
வைரவிழாவை சில தலைவர்கள் விமர்சித்தார்கள். விமர்சனம் செய்தவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. தம்பியின் அழைப்பை ஏற்று வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று ஸ்டாலின் பேசினார்.