கருணாநிதியைப் போல் வருங்காலத்தில் ஸ்டாலின் பற்றியும் பேசுவோம்: ராகுல் காந்தி

இன்று கருணாநிதி பற்றி பேசுவது போல் ஒரு நாள் நாம் ஸ்டாலினை பற்றியும் பேசுவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது

”திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்பதை பெருமையாக நினைக்கிறேன். வலிமையும், துணிவும் தான் அவரது ஆற்றல். மக்களை கருணாநிதி நேசிப்பதும், கருணாநிதி மக்களை நேசிப்பதுமே அவரின் தொடர் வெற்றிக்குக் காரணம். கருணாநிதியின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. அவர் பல்லாயிரக்கணக்கானோர் நேசிக்கும் தலைவர்.

5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக கருணாநிதி இருக்கிறார். அவரது சாதனையை யாரும் முறியடிக்க முடியாது. கருணாநிதியின் எழுத்துகள் எல்லாம் மக்களின் எண்ணங்களையே பிரதிபலித்தது. அவரின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. நாங்கள் வேறு மாநிலத்திலிருந்து வந்தாலும் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்திருக்கிறோம்

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முக்கிய பிரச்சினைகளில் யாரையும் ஆலோசிக்காமல் பிரதமர் மோடி முடிவெடுக்கிறார். யாரையும் கேட்காமல் பணத்தை செல்லாது என பிரதமர் அறிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பொருளாதார வீழ்ச்சியை அருண் ஜேட்லி ஏற்கவில்லை.

இப்போது நாடு முழுவதும் ஒரே கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் கொள்கை திணிப்பை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் ஒரே சிந்தனை திட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். அனைத்து குரல்களும் ஒன்றிணைந்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும்.

தமிழக மக்களுக்காக ஸ்டாலினும் பேசி வருகிறார். ஒரு மாபெரும் மனிதரின் இடத்தை நிரப்பும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது ஸ்டாலின் சரியான திசையில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். இன்று கருணாநிதி பற்றி பேசுவது போல் ஒரு நாள் நாம் ஸ்டாலினை பற்றியும் பேசுவோம்” என்றார் ராகுல் காந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *