தினகரன் கட்சிப் பணியாற்றுவது குறித்து முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்
தினகரன் கட்சிப் பணியாற்றுவது குறித்து முதல்வர் முடிவெடுப் பார் என்று அமைச்சர் செங் கோட்டையனும், தினகரனை சந்திக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அமைச்சர் ஜெயக் குமாரும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, “கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்று கூறினார்.
இந்நிலையில் திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தினகரன் கட்சிப் பணியாற்றுவது குறித்து முதல்வர் கே.பழனிசாமிதான் முடிவு செய்வார்” என்றார்.
இதுபோல ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் ஜெயக்குமார் அங்கு நிருபர்களிடம் கூறும்போது, “டிடிவி தினகரனை சந்திக்கும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை. முதல்வர் கே.பழனிசாமியை தினகரன்தான் இயக்குகிறார் என்று கூறுவது தவறு” என்று தெரிவித்தார்.