தமிழகத்தில் நெல் உற்பத்தி 85 சதவீதம் வீழ்ச்சி: உற்பத்தியை அதிகரிக்க ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை – அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் நெல் உற்பத்தி சுமார் 85 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டு நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி 85 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 8 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டில் 1 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. ஏறக்குறைய நெல் உற்பத்தியில் சுமார் 85 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த ஆண்டு கடும் வறட்சியை சந்தித்ததாலும் காவிரியில் இருந்து உரிய தண்ணீரை பெற்றுத் தராத நிலையாலும் நெல் அதிகமாக உற்பத்தி செய்யும் டெல்டா பகுதிகளில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 85 சதவீதம் நெல் உற்பத்தி குறைந்துள்ளதை அபாயகரமான எச்சரிக்கையாக கருத்தில் கொள்ளவேண்டி உள்ளது.
உணவு உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், இன்றைக்கு இந்தியாவிலேயே கடைசி இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இனியாவது ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டு, நெல் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தூர்வாரப் படுகிறது. 83 ஆண்டுகளுக்குப் பிறகு அள்ளப்படுவதால் மிகவும் வளம் மிக்க மண்ணாக இருக்கும். தூர்வாரப்படும் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி, செங்கல் சூளை வைத்திருப்பவர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே மண்ணை வழங்குவதாக வரும் செய்திகள் வேதனை தருகிறது. தூர்வாரப் படும் மண்ணை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவசமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.