லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
6 பேர் கொல்லப்பட்ட லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பிரிட்டனில் லண்டன் பிரிட்ஜில் நடந்து சென்றவர்கள் மீது வேனை மோத செய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது. இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு உலக நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “லண்டனில் நடத்தப்பட்டு உள்ள தாக்குதல்கள் அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளது, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என குறிப்பிட்டு உள்ளார்.