தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரே விண்ணப்பத்தில் ஒப்புதல், உரிமம் வழங்கும் முறை: முதல்வர்

தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரே விண்ணப்பத்தில் ஒப்புதல், உரிமம் வழங்கும் முறை: முதல்வர்
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) மூன்றாவது தென்மண்டல மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்கனவே உள்ள உகந்த சூழ்நிலையை மேலும் எளிமைபடுத்தும் வகையில், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதற்கு ஏற்ற சட்டங்களும் இயற்றப்படும்.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில், மதுரை – தூத்துக்குடி தொழிற் பெருவழிச்சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்குத் தேவையான நில எடுப்புப் பணி, இரண்டு மாவட்டங்களில் நிறைவுபெற்றுள்ளது.
2011-17-ம் ஆண்டுகளில், தமிழகத்தில் 2 ஆயிரத்து 472 புதிய உயர் அழுத்த மின் இணைப்புகள் அளிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், தமிழகம் ஈர்த்த மொத்த அன்னிய நேரடி முதலீடு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 970 கோடி ரூபாய் ஆகும். மே, 2011-ம் ஆண்டு மே மாதம் முதல் 2016-ம் ஆண்டு டிசம்பர் வரை தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வளர்ச்சியின் விகிதம், 263 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2011-17-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்ட முதலீடு 3 லட்சத்து 7 ஆயிரத்து 457 கோடி ரூபாய். இது மட்டுமன்றி, மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து விசாகப்பட்டினம் – சென்னை – தூத்துக்குடி – கன்னியாகுமரி வரை ஒரு தொழிற் பெருவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயலாக்கத்திற்கு வரும்பொழுது தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மிகப்பெரிய பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும் என்பது உறுதி. அடுத்த உலக முதலீட்டாளர் மாநாட்டை 2018-ம் ஆண்டில் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசு நடத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *