புதிய பாடத்திட்டம் பற்றி 6–ந்தேதி அறிவிப்பு

பள்ளிகல்வித்துறையின் மானிய கோரிக்கையின் போது 41 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளோம் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
வேலூர், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் அரசு பள்ளிகளில் சிறப்பான கழிப்பறைகள் அமைய உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சன்பீம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த விழாவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 142 பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 84 பள்ளிகள், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 47 பள்ளிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 70 பள்ளிகள், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 105 பள்ளிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 83 பள்ளிகள் என 6 மாவட்டங்களில் உள்ள நர்சரி, ப்ரைமரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி என 531 பள்ளி கட்டிடங்களுக்கு முறையான வரைபட அனுமதி பெற்றிறாத பள்ளிகளுக்கு அதனைப் பெற்று முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 31.5.2018 வரை தற்காலிக அங்கீகார ஆணைகளை பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினார்கள்.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன் தலைமை தாங்கினார்.
இந்த விழாவிற்கு அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினா கோ.அரி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில் கூறியதாவது:–
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழை எளிய மக்கள் அனைவரும் கல்விகற்க வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தையும், மறைந்த முதல்வர் அம்மா சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் கல்வி பயில மாணவ – மாணவிகளுக்கு அனைத்து வகையான கல்வி உதவிகளையும் தாயாக இருந்து செயல்படுத்தி கல்வித்துறையை இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் வகையில் செயல்படுத்தி உள்ளார். அவரது ஆசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசின் தலைமையில் கல்வித்துறை அனைவரும் போற்றும் வகையில் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மற்றும் திருப்பத்தூர் இரண்டு கல்வி மாவட்டங்களை பிரித்து மூன்றாவதாக ராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை உருவாக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை உடனடியாக அரசின் பரிசீலினைக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். இதுமட்டுமில்லாமல் தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்டங்களிலும் புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்படும்.
41 புதிய அறிவிப்புகள்
தமிழகத்தில் உள்ள நர்சரி, ப்ரைமரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள் மற்றும் சங்க தலைவர்கள் பள்ளி கட்டிடங்களுக்கான அனுமதி வழங்க வைத்த கோரிக்கைகள் குறித்து வீட்டு வசதித்துறை அமைச்சரிடம் தெரிவித்து விரைவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய செயல்திட்டங்களை கல்வித்துறையில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது. அதனடிப்டையில் எதிர்வரும் பள்ளிகல்வித்துறையின் மானிய கோரிக்கையின் போது இந்தியாவிலேயே எந்த ஒரு மாநில அரசும் கல்வித்துறையில் செயல்படுத்திடாத வகையில் 41 புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம். புதிய பாடத்திட்டங்களை நடைமுறைபடுத்த இந்த அரசு எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பலரும் கேள்விகளை தொடுத்து வருகிறார்கள். இவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சரின் அனுமதி பெற்று எதிர்வரும் 6–ந்தேதி (செவ்வாய்கிழமை) அதற்கான அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம். இந்த அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பான கல்வியாளர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று புதிய பாட திட்டத்திற்கு வடிவம் கொடுத்துள்ளது என்று நாடே போற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிததுக்கொள்கிறேன்.
10 ஆயிரம் கழிப்பிடங்கள்
தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.26,862 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு பள்ளி கட்டிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மெட்ரிக்குலேசன் மற்றும் 3 ஆயிரம் நர்சரி பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளது. இந்த தனியார் பள்ளிகள் தங்களுக்கருகாமையில் உள்ள கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் 10 ஆயிரம் சிறந்த நவீன கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர அனைவரும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாதிரி கேள்வித்தாள்
தமிழகத்தில் தொழிற் நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறைகளை கட்டி கொடுக்க முன்வந்து இடங்களை தேர்வு செய்ய உள்ளோம். அவற்றை அடுத்த ஒரு மாதத்திற்குள் கட்டி முடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் அணிந்து செல்லும் சீருடைகளை போல அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 3 விதமான சீருடைகள் வழங்படும். அப்போதுதான் மாணவர்களுக்கு கல்வியில உற்சாக நாட்டத்தை ஏற்படுத்த முடியும். இந்த ஆண்டு முதல் 11 ம் வகுப்பில் பொது தோ்வு முறையை அரசு நடைமுறைபடுத்த உள்ளது. அதற்கான அட்டவணையை அரசு மாணவர்களுக்கு வழங்க உள்ளது. மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் உள்ளது போல மாதிரி கேள்வித்தாள்கள் அரசு பள்ளிகளிலும் வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அம்மா செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய போது ஏழை எளிய மக்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவேன் என்றார். அதனடிப்படையில் ஏழை எளிய குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் வகையில் பள்ளிகல்வித்துறையில் சீறிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
5 பண்புகளை கற்றுத் தர
புதிய வகுப்பு
மாணவர்களை ஒழுக்கத்துடன் உருவாக்குவதற்காக கல்வித்துறையில் புதிய வகுப்புகளை உருவாக்க உள்ளோம். இந்த வகுப்பில் யோகா, தேசபக்தி, சாலை பாதுகாப்பு விதிகள், பெற்றோரை மதிக்கின்ற பண்புகள் மற்றும் விளையாட்டு போன்ற 5 பண்புகளை உள்ளடக்கி புதிய வகுப்பு உருவாக்கப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் சார்பாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும் அனைத்து துறைகளை சார்ந்த அமைச்சர்களும் அவரவர் துறைகளில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதிலேயே ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆகவே பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து அரசு உறுதுணையாக இருக்கும் நீங்களும் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய பள்ளி மாணவ மாணவியர்களின் வாழ்க்கை மேம்பாட அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் இயக்குநர் அ.கருப்புசாமி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.ரவி, ஜி.லோகநாதன், சி.ஜெயந்தி பத்மநாபன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி.மோகன், வேலூர் –- திருவண்ணாமலை ஆவின் தலைவர் த.வேலழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எ.ஜி.விஜயன், மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் டி.ராஜா, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டபுள்யு.ஜி.மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துரைசாமி, மாநில மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன், மாநில பொதுசெயலாளர் நந்தகுமார், சன்பீம் பள்ளி தாளாளர் ஹரிகோபாலன், தொலைதொடர்பு குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் கோரந்தாங்கல்குமரர் அரசு அலுவலர்கள் மற்றும் வேலூர்,திருவண்ணாமலை,தர்மபுரி,கிருஷ்ணகிரி,திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சார்ந்த தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *