பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார். இரு நாடுகளும் ஆழமான நட்புறவு கொண்ட நாடுகள் என அவர் பெருமிதத்துடன் கூறினார். அப்போது பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தம், சர்வதேச தீவிரவாதம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யாவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்தார். பிரான்ஸ், இந்தியாவின் 9-வது மிகப்பெரிய கூட்டாளி. ராணுவம், விண்வெளி, அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற மேம்பாடு, ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் பிரான்ஸ் இணைந்து பணியாற்றி வருகிறது. எனவே பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாரீஸ் ஒர்லி விமான நிலையத்தில் சென்று இறங்கிய பிரதமர் மோடியை அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரார்டு கொலாம்ப் வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசீ அரண்மனைக்கு சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபர் இமானுவல் மேக்ரானை சந்தித்து பேசினார்.
இரு தலைவர்களும் சர்வதேச விவகாரங்கள், பரஸ்பரம் தொடர்புடைய பிரச்சினைகள், இரு தரப்பு ராணுவ உறவை மேம்படுத்துதல், பயங்கரவாத ஒழிப்பில் இணைந்து பணியாற்றுதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதித்தனர்.
பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் அதிபர் மக்ரோனும் ஆலோசனை நடத்தினர்.
இரு தரப்பு பேச்சு வார்த்தை முடிந்ததும் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
உலக சமாதானத்துக்காக…
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்தியாவும், பிரான்சும் ஆழமான நட்புறவு கொண்ட நாடுகள் ஆகும். நீண்ட காலமாக இரு நாடுகளும் இருதரப்பு ரீதியாகவும், பன்முக ரீதியாகவும் இணைந்து பணியாற்றி வந்துள்ளன.
இரு தரப்பு உறவு மேலும் மேம்பட வேண்டும் என்று விரும்புகிறேன். வர்த்தகம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், முதலீடுகள், எரிசக்தி, கல்வி, தொழில் நிறுவனங்கள் என அனைத்து துறையிலும், இந்தியா, பிரான்ஸ் உறவுகளுக்கு நாங்கள் ஊக்கம் அளிக்க விரும்புகிறோம்.
இந்தியா, பிரான்ஸ் இடையேயான கலாசார உறவுகள் மேம்பட வேண்டும் என்று விரும்புகிறோம். உலக சமாதானத்துக்காக முதல் இரு உலகப் போர்களிலும் இந்தியர்கள் பலரும் கலந்து கொண்டு போரிட்டிருக்கிறார்கள்.
மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் விளங்குகிறது. அதனை வேரறுக்க சர்வதேச நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரான்ஸுடன் இந்தியா தோளோடு தோள் நின்று பணியாற்றும். நமது எதிர்கால தலைமுறையினரின் நன்மைக்காக பாரீஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். தாய் பூமியை காப்பது நமது கடமை.
இந்தியர்களை பொறுத்தவரை இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம். பாரீஸில் சர்வதேச சூரியசக்தி கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பிரான்ஸ் முக்கிய பங்காற்றும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பயங்கரவாதத்துக்கு
எதிரான போரில்…
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசும்போது,
“பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவிக்கிறது. பருவநிலை மாற்ற பிரச்சினையிலும் எதிர்த்து நின்று போராட பிரான்ஸ் உறுதி கொண்டுள்ளது. பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டின் கட்டமைப்புக்கு உட்பட்டும், அவர்கள் செயல்படுத்துகிற நடவடிக்கைகளுக்கு ஏற்பவும் பிரான்ஸ் செயல்படும். கலாச்சாரம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் ” என்று கூறினார்.
இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். உலக சூரிய மின்சக்தி கூட்டணி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.