5 நாள் குமரித்திருவிழா: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கினார்
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் குமரி திருவிழா – 2017 நிகழ்ச்சி நேற்று (3–ந்தேதி) துவங்கியது. 7–ந்தேதி வரை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமார் முன்னிலையில், கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத்திடலில், குமரி திருவிழா – 2017 நிகழ்ச்சியினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந. நடராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழக அரசின்கீழ், கடந்த 3 வருடங்களாக இந்தியாவிலேயே, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. மாநிலம் முழுவதும் சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களாக சுற்றுலா பயணிகளை நோில் சந்தித்து, குறைகள் உடனுக்குடன் களையப்படுகிறது. சுற்றுலாத்தலங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஸ்ரீவில்லிபுதூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் 4 வருடங்களுக்கு ஒருமுறை திருவள்ளுவர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி, மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது, திருவள்ளுவர் சிலையில் படிந்துள்ள உப்பு படிவம் சுத்தநீரால் கழுவப்பட்டு, பேப்பர் பேஸ்ட் மற்றும் சிலிக்கான் அமில கலவை கொண்டு தமிழ்நாடு சுற்றுலா கழக மேலாண்மை இயக்குநர் தலைமையிலான வல்லுநர் குழு மூலம், சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது, அறிவிக்கப்பட்டபடி, உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா விடுதியில் ஆயிரம் போ் அமரும் வசதி கொண்ட கருத்தரங்க அறை மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்படவுள்ளது.
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைப்பதற்காக பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள திருக்கோவில் மாவட்டங்களை பார்வையிடுவதற்காகவும், மருத்துவ சிகிச்சை மற்றும் உடல்நலம் பேணுவதற்காகவும் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சுற்றுலாப்பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி ந. நடராஜன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் கா. நெல்சன் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் ஆ. சுகுமாரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், உதவி இயக்குநர் மாடசாமி சுந்தரராஜ், அரசு வழக்கறிஞர் அ. ஞானசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்க நாள் நிகழ்ச்சியில் மீனாட்சி ராகவன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், நெல்லை எஸ்.பி. ராஜ் சுகராகம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வெல்லமண்டி ந. நடராஜன் வழங்கினார்.