ஆதரவற்றோருக்காக ‘நம்ம இல்லம்’: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்தார்

புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டையில் நகராட்சியின் சார்பில் ஆதரவற்றோருக்காக புதிதாக கட்டப்பட்ட நம்ம இல்லத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தலைமையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
புதிதாக கட்டப்பட்ட நம்ம இல்லத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது:-
நகர் பகுதிகளில் வீடு இல்லாமல் ஆதரவற்ற நிலையில் சாலையோரங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் தங்கியுள்ளார்கள். இவ்வாறு தங்கியுள்ள ஏழை மக்களின் துயரத்தை போக்கும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டையில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற வீடு அற்ற ஏழை மக்களுக்கான நம்ம இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடம் 2500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் தங்கும் இடம், கட்டில், மெத்தை, தலையனை, படுக்கைவிரிப்புகள் 6 கழிவறைகள், 4 குளியலறைகள், மின்விசிறி, பாதுகாப்பு சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் எழிலுற கட்டப்பட்டுள்ளதுடன் தற்பொழுது இந்த இல்லத்தில் தங்கியுள்ள 39 நபர்களுக்கும் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வீடில்லாமல் பொது இடங்களில் வசித்து வரும் ஏழை பொது மக்கள் மிகுந்த பயன்பெறுவார்கள். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இல்லாத ஆதரவற்றோர் நகராட்சியின் நம்ம இல்லத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர்(பொ) ஜீவாசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் வி.சி.ராமையா, முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் சேட்(எ)அப்துல்ரஹ்மான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், தியாகு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *