கருணாநிதியின் வைர விழாவில் தமிழக தலைவர்கள் பேசவைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது: திருமாவளவன்
கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை மேடையில் பேச வைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜை மருத்துவமனையில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,
”சகிப்பின்மையின் வெளிப்பாடே இது போன்ற தாக்குதல் சம்பவங்கள். இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழா வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
தேசிய தலைவர்கள் அனைவரும் ஒரு மேடையில் அமர்ந்து மதச்சார்பின்மை கருத்துக்களை வலியுறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
இருப்பினும் தமிழக தலைவர்களை அழைத்து குறிப்பாக கருணாநிதியுடன் சம காலத்தில் அவரை எதிர்த்தோ ஆதரித்தோ அரசியல் செய்தவர்களை அழைத்து பேச வைத்திருந்தால் கருணாநிதி குறித்து இன்னும் நிறைய விஷயங்கள் குறித்து அவர்கள் பேசியிருப்பார்கள். நாமும் அவர் குறித்து கூடுதலாக அறிந்திருக்க முடியும். அந்த அடிப்படையில் தமிழக தலைவர்களை மேடையில் பேச வைக்காதது ஏமாற்றமே” என்றார்