தமிழக விவசாயிகளை புறக்கணித்தால் மத்திய அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம்: திமுக விவசாய அணி செயலாளர் அறிவிப்பு
தமிழக விவசாயிகளைப் புறக் கணித்தால், மத்திய அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும் என திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் 4-வது நாளாக நேற்று நடைபெற்ற விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக விவசாயிகள் தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் அதைக் கண்டுகொள்வது இல்லை. மாநில அரசு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல் படுகிறது. மீத்தேன் திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் எனத் தெரிவித்த மாநில அரசு, அதற்கு எதிராகப் போராடியவர்களை போலீஸாரை ஏவிவிட்டு கைது செய்கிறது.
மத்திய அரசு தொடர்ந்து தமிழக விவசாயிகளைப் புறக்கணித்தால் மிகப் பெரிய போராட்டம் நடத்தும் சூழல் ஏற் படும்.
குறுவை தொகுப்புத் திட்டம் விவசாயிகளுக்கு எந்த பலனையும் தராது. இத்திட்டத்தில் மொத்த சாகுபடி எவ்வளவு, பயன்பெறுவோர் யார் யார் என்பது குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.