பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்: 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா நிர்ணயித்த 320 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் பொறுமையாகவே தனது ஆட்டத்தை தொடங்கியது. 5-வது ஓவர் முடியும் முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆட்ட நேரம் மழையால் வீணானதால், இலக்கு 41 ஓவர்களுக்கு 289 என திருத்தப்பட்டது.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9வது ஓவரில் ஷெஸாதை 12 ரன்களுக்கு இழந்தது. புவனேஸ்வர் குமார் இந்த விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த சில ஓவர்களிலேயே உமேஷ் யாதவ் பந்தை பவுண்டரி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார் பாபர் அஸாம் (8 ரன்கள்).
பிறகு அசார் அலி, முகமது ஹஃபீஸ் இணை பொறுப்புடன் ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. ஹஃபீஸ் திணறினாலும், அசார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 64 பந்துகளில் அவர் அரை சதம் எட்டினார். ஆனால் அந்த ஓவரிலேயே ஜடேஜா வீசிய பந்தை ஸ்வீப் செய்ய முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மீதமிருந்த 20 ஓவர்களில் 198 ரன்கள் என்ற நிலமையில், டி20 ஆட்டத்தை போல ஆட வேண்டிய நிலைக்கு பாக் அணி தள்ளப்பட்டது. இதை உணர்ந்து ஷோயிப் மாலிக், சிக்ஸர், பவுண்டரி என விளாச ஆரம்பித்தார்.
திருப்புமுனையான ரன் அவுட்
ஷோயிப் மாலிக் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன் எடுத்திருந்த போது, 24-வது ஓவரில், உமேஷ் யாதவ் வீசிய பந்தை சற்று தடுமாற்றத்துடன் பேக்வர்ட் பாயிண்ட் பகுதிக்கு தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஆனால் மறுமுனையில் இருந்த ஹஃபீஸ் ரன் வேண்டாம் என மறுக்க, ஷோயிப் மாலிக் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைவதற்குள் ரவீந்திர ஜடேஜா பந்தை எடுத்து மின்னல் வேகத்தில் ஸ்ட்ரைக்கர் முனையின் ஸ்டம்பை நொறுக்கினார். ரன் அவுட் ஆன ஷோயிப் மாலிக் பெவிலியன் திரும்பினார்.
அதிரடியாக ஆட ஆரம்பித்திருந்த ஷோயிப் மாலிக் ஆட்டமிழந்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு 14 ஓவர்களில் 155 ரன்கள் தேவையாயிருந்தது. ஒரு ஓவருக்கு சராசரியாக 11 ரன்கள் தேவை என்ற நிலை.
தொடர்ந்து சீரான இடைவெளியில் பாக் வீரர்கள் ஆட்டமிழக்க ஆரம்பித்தனர். தத்தளித்து வந்த ஹஃபீஸ் 43 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். ரன் ஏதும் சேர்க்காமலேயே இமாத் வஸிம் ஆட்டமிழ்ந்தார். 2 பவுண்டரிகள் அடித்து சிறிது நம்பிக்கை அளித்த சர்ஃபராஸ் அகமது 15 ரன்களுக்கு பாண்டியாவின் வேகத்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெற்றிக்கு 11 ஓவர்களில் 137 ரன்கள். ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்களுக்கு மேல் தேவை. பாகிஸ்தான் தோல்வி உறுதியானது.
உமேஷ் யாதவ் வீசிய 34வது ஓவரில் அடுத்தடுத்து முகமது ஆமிர், ஹஸன் அலி இருவரும் ஆட்டமிழக்க, 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கடைசி பாக். வீரர் வஹாப் ரியாஸ் உடல்நலம் சரியில்லாததால் ஆடவரவில்லை. ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்
முன்னதாக ஆடிய இந்திய அணி யுவராஜ் சிங், கோலி, பாண்டியா உள்ளிட்டவர்களின் அதிரடியுடன் 320 ரன்களை குவித்தது. இந்தியாவின் முதல் 4 ஆட்டக்காரர்களும் அரை சதம் கடந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 119 பந்துகளில் 91 ரன்கள் ஷிகர் தவண் 65 பந்துகளில் 68 ரன்கள், விராட் கோலி 68 பந்துகளில் 81 ரன்கள், யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தனர். கடைசியில் ஆட வந்த பாண்டியாவும் 3 சிக்ஸர்களுடன் 6 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.