அதிவேக 4ஜி வேகம் வழங்குவதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட டவுன்லோடு வேகங்கள் சார்ந்த சமீபத்திய அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணி இடம் பிடித்துள்ளது. ஏப்ரல் மாத நிலவரப்படி ஜியோவின் டவுன்லோடு வேகம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் இண்டர்நெட் டேட்டா வேகம் சார்ந்த முழு தகவல்களை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கிய நிறுவனங்கள் சார்ந்த பட்டியலை டிராய் வெளியிட்டுள்ளது.
அதன்படி ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகத்தில் முன்னிலை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் ரிலையன்ஸ் ஜியோ நொடிக்கு 19.12 எம்பி என்ற அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராயின் மைஸ்பீடு எனும் செயலி கொண்டு டவுன்லோடு வேகம் சேகரிக்கப்படுகிறது. சராசரியாக நொடிக்கு 16 எம்பி என்ற வேகத்தில் ஐந்து நிமிடங்களில் ஒரு திரைப்படத்தை முழுமையாக டவுன்லோடு செய்ய முடியும்.
மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லேடு வேகம் நொடிக்கு 18.48 எம்பியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக ஜியோ வேகம் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற நிறுவனங்களை பொருத்த வரை ஐடியா செல்லுலார் நொடிக்கு 13.70 எம்பி, வோடபோன் நெட்வொர்க் நொடிக்கு 13.38 எம்பியாக இருந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஜியோவின் ஃபைபர் டூ ஹோம் திட்டத்திற்கான சோதனைகள் துவங்கியுள்ளதாகவும், விரைவில் வணிக ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.