உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தால் மக்களின் வரிப்பணம் வீணாகும்: அன்புமணி ராமதாஸ்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று திறந்துவைத்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகாலமாக தொழிலில் முதலீட்டுகள் ரூ.86 ஆயிரம் கோடி தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று இருக்கின்றன. ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, மராட்டியம் ஆகிய பகுதிகளுக்கு தான் அதிகம் சென்று இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் தொழில் தொடங்க ஏற்ற சூழல் கிடையாது. ஏனென்றால் தொழில் தொடங்க வருபவர்களிடம் லஞ்சம் எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள். தமிழகத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளன.
தமிழகத்தில் 2018-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 25 ஆயிரம் கோடி முதலீடு தான் நடந்தது.
தமிழகத்தில் தொழிலும் கிடையாது. தொழிலாளர்களும் வேதனையில் இருக்கிறார்கள். உதாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கூட அரசு வழங்கவில்லை. அதேபோல் நல்ல அரசாங்கம், நிர்வாகம் தமிழ்நாட்டில் இல்லை.
வெறும் விளம்பரம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த முறை நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.150 கோடி விளம்பரத்துக்காக மட்டும் செலவு செய்தார்கள்.
2018-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும். தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இப்போது நடக்கும் அரசாங்கம் ஒரு தலைமை இல்லாமல் நடக்கிறது. தமிழகத்தில் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சுருட்டிக்கொள்ளலாம் என்று தான் நினைக்கிறார்கள். அதுதான் அவர்கள் கொள்கையாக இருக்கிறது.
தமிழ்நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளை ஒதுக்கினால் தான் தமிழ்நாடு முன்னேறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தையும் குப்பை மேட்டில் கொட்டுவது சட்டப்படி குற்றம். மட்கும் குப்பையை தனியே பிரித்து மட்க வைக்க வேண்டும். மறுசுழற்சிக்கு உகந்தவற்றை தனியே பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும்.
எதற்குமே பயன்படாத குப்பையை மட்டுமே குப்பை மேட்டில் கொட்டி, விதிமுறைப்படி பராமரிக்க வேண்டும். நீர் நிலைகள், வடிகால்கள், பொது இடங்கள், சாலைகள் என எந்த ஒரு இடத்திலும் குப்பையை தூக்கி எறிவதும், புதைப்பதும், எரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இத்தகையை விதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசும் தமிழகத்தின் அனைத்து நகராட்சி அமைப்புகளும் முறையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டினை குப்பையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஜூன் 5-ந்தேதி(இன்று) உலக சுற்றுச்சூழல் நாளில் அனைவரும் இதற்காக உறுதி எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *