தினகரன் கட்சி பணியாற்ற முதல்வர் அனுமதி தேவையில்லை: நாஞ்சில் சம்பத்

தினகரன் கட்சி பணியாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி தேவையில்லை என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
இரட்டை இலை வழக்கில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதான தினகரன் திகார் சிறையில் இருந்து விடுதலையானதும் அ.தி.மு.க. அம்மா அணியில் மோதல் வெடித்து உள்ளது.
இணைப்பு முயற்சி வெற்றி பெறாததால் மீண்டும் கட்சிப் பணிக்கு திரும்பி இருப்பதாக தினகரன் பரபரப்பு பேட்டி அளித்தார். இது கட்சியில் பெரும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.
உடனே அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அம்மா அணியை தினகரன் வழி நடத்திச் செல்வார் என்று கூறத் தொடங்கி விட்டனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் கட்சிப் பணியாற்றுவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்றார். அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது, “வழிகாட்டுதல் குழு முடிவு செய்யும்” என்றார்.
அமைச்சர்களின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்து உள்ளார். தினகரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டளை இட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழி நடத்தியவர்கள் சசிகலாவும், தினகரனும்தான். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முழுகாரணம் சசிகலா, தினகரன். இவர்களது உழைப்பை புறந்தள்ளிவிட்டு ஆட்சியையும், கட்சியையும் நடத்த முடியாது.
டி.டி.வி.தினகரன் ஒரு வலிமைமிக்க தலைவராக திகழ்கிறார். அவரது தலைமையில்தான் அ.தி.மு.க. வெற்றிநடை போட முடியும். அவர் கட்சிப் பணி செய்வதற்கு முதல்-அமைச்சரின் அனுமதி வேண்டும் என்பதுபோல சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது கேலிகூத்தாகும். முதல்- அமைச்சர் அவரது உதவியாளருக்கு வேண்டுமானால் கட்டளையிடலாம். ஆனால் தினகரனுக்கு கட்டளையிடும் அதிகாரம் அவருக்கு இல்லை.
1½ கோடி தொண்டர்களின் ஆதரவுடன் தினகரன் இந்த இயக்கத்தை வலிவோடும், பொலிவோடும் நடத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் ஆதரவு திரட்டுவதற்காக நானும், நாஞ்சில் சம்பத்தும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம்.
இந்த கூட்டங்களில் தொண்டர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை சசிகலா, தினகரன்தான் வழிநடத்த முடியும் என்பதற்கு இதுவே உதாரணம்.
விடுதலை செய்யப்பட்ட தினகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் பணியாற்றுவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.
அந்த அதிகாரம் முதல்- அமைச்சருக்கு இல்லை. கட்சியை யார் வழி நடத்த வேண்டும் என்று பொதுச்செயலாளர் முடிவு செய்வார். தினகரனை அமைச்சர்கள் சந்திக்காததில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.
நன்றி உள்ளவர்கள் மட்டும் வந்து பார்த்தால் போதும். நன்றி கெட்டவர்கள் யாரும் தினகரனை சந்திக்க மாட்டார்கள். அந்த வகையில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் தினகரனை சந்திக்க வேண்டாம். உண்மையான அ.தி. மு.க. தொண்டர்களும், விசுவாசிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. அகற்றப்பட்ட சசிகலா பேனர்கள் தலைமை கழகத்தில் விரைவில் வைக்கப்படும். யாருக்கு ஆதரவு என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். அமைச்சர்கள் காலையில் ஒன்று மாலையில் ஒன்று பேசுகிறார்கள். நன்றி கெட்ட அமைச்சர்கள் விரைவில் தூக்கி எறியப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *