சரக்கு ரெயில் மோதியதில் இளம்பெண் உயிர் தப்பிய அதிசயம்

‘ஹெட்போனை’ மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்த இளம்பெண் சரக்கு ரெயில் மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் குர்லா ரெயில் நிலையத்தில் நடந்தது.
செல்போனில் ‘ஹெட்போன்’கள் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கவோ, பேசவோ வேண்டியது தான். ஆனால் அதற்கான இடம் தண்டவாளம் அல்ல. இதை மும்பைவாசிகள் பலரும் பின்பற்றுவதில்லை. ‘ஹெட்போனை’ காதில் வைத்து கொண்டு தண்டவாளத்தை கடப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இப்படி சென்ற பலர் ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கவும் செய்திருக்கிறார்கள்.
குர்லா ரெயில் நிலையத்திலும் அதுபோன்ற சம்பவம் நடந்து உள்ளது. இதில், ‘ஹெட்போன்’ மாட்டிக் கொண்டு தண்டவாளத்தை கடந்தவர் ஒரு இளம்பெண். அவருடன் அதிர்ஷ்டமும் கூடவே சென்று உள்ளது என்று தான் கூறவேண்டும். ஏனெனில் ரெயில் மோதியதில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பிய அதிசயமும் நடந்தது.
இவ்வாறு உயிர் தப்பிய இளம்பெண் பாண்டுப்பை சேர்ந்த பிரதிக்‌ஷா(வயது19). சம்பவத்தன்று, குர்லாவில் உள்ள தோழியை பார்ப்பதற்காக குர்லா ரெயில் நிலையத்திற்கு மின்சார ரெயிலில் வந்து இறங்கினார். பின்னர் 7-ம் எண் பிளாட்பாரத்திற்கு நடைமேம்பாலம் வழியாக செல்ல சோம்பல்பட்டு தண்டவாளத்தில் இறங்கினார்.
காதில் ‘ஹெட்போனை’ மாட்டிக்கொண்டு, தான் சந்திக்க செல்லும் தோழியுடன் பேசியபடியே தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் 7-ம் எண் பிளாட்பாரத்தையொட்டி உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தோழியுடன் பேசிக்கொண்டு சென்ற மும்முரத்தில் பிரதிக்‌ஷா ரெயில் வருவதை கவனிக்கவில்லை. ரெயில் சத்தம் எழுப்பியதும் அவர் காதில் விழவில்லை.
ரெயில் தன்னை நெருங்கியபோது தான் பார்த்தார். அதிர்ச்சியில் உறைந்த பிரதிக்‌ஷா பிளாட்பாரத்தை நோக்கி ஓட்டம் பிடித்தார். பதற்றத்தில் பிளாட்பாரத்தில் ஏற முடியாமல் தவித்தார். ரெயில் நெருங்கியதை பார்த்து பீதியில் அலறிய அவர், செய்வதறியாது ரெயிலை நிறுத்தும் முயற்சியில் என்ஜினை நோக்கி ஓடினார். இனி ரெயில் தன் மீது மோதுவதை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் நொடிப்பொழுதில் திரும்பி நின்று கண்ணை இறுக மூடிக்கொண்டு, கையால் தலையை பிடித்துக் கொண்டு செய்வதறியாமல் நின்றார்.
அப்போது சரக்கு ரெயில் என்ஜின் பிரதிக்‌ஷா மீது மோதியது. இதில் நிலைகுலைந்து பிரதிக்‌ஷா தண்டவாளத்தில் குப்புற விழுந்தார். என்ஜினை அடுத்து ஒரு ரெயில் பெட்டியும் பிரதிக்‌ஷாவை கடந்து சென்றது. பின்னர் ரெயிலும் நின்றது.
இந்த திகில் காட்சி பிளாட்பாரத்தில் நின்ற பயணிகளின் நெஞ்சை பதை, பதைக்க செய்து விட்டது. பிரதிக்‌ஷா ரெயில் மோதி இறந்து விட்டதாகவே அனைவரும் கருதினார்கள். ஆனால் அதிசயமாக அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பி விட்டார். பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள் பிரதிக்‌ஷாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ராஜவாடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தண்டவாளத்தில் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சம்பந்தப்பட்ட இளம்பெண் ஓடியதை பார்த்து சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்த முயற்சித்து உள்ளார். நிற்கும் முன் குறைந்த வேகத்தில் தான் அப்பெண் மீது ரெயில் மோதியதும் தெரியவந்தது. இதனால் தான் பிரதிக்‌ஷா லேசான காயத்துடன் உயிர் தப்பியதும் தெரியவந்தது. ஆனாலும் அவர் உயிர் தப்பியது அதிர்ஷ்டத்தின் பலனே என்று விபத்தை கண்கூடாக பார்த்த பயணிகள் தெரிவித்தனர்.
விபத்து காட்சிகள் அனைத்தும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *