லாரி கிளீனர் மரணத்தில் மர்மம்: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனிடம் விசாரணை
சொகுசு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து லாரி கிளீனர் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். இது குறித்து பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவார் மூர்த்தி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர்.
மூர்த்தியின் இளைய மகன் சதீஷ்குமார். லாரி கிளீனரான இவர் நேற்று மதியம் பெரிய வடகம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மண் சறுக்கியதால் மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த கார் மீது விழுந்தார்.
இதில், காரின் பின்பக்க கதவில் உள்ள கைப்பிடியில் சேதம் ஏற்பட்டது. இந்த கார் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அதே கிராமத்தை சேர்ந்த மாரியப்பனின் கார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன், அவரது நண்பர் யுவராஜ் மற்றும் சிலர் சதீஷ்குமார் வீட்டிற்கே சென்று, தனது புதிய காரை சேதப்படுத்தி விட்டதாக கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து புகார் கொடுத்து சதீஷ் குமார் மற்றும் அவரது தாய் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டிய மாரியப்பனின் நண்பர் யுவராஜ், சதீஸ்குமாரின் செல்போனை பிடுங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
மிரட்டி சென்ற சிறிது நேரத்தில் இளைஞர் சதீஸ்குமாரை காணவில்லை. இதனால், பயந்துபோன பெற்றோர்களும் உறவினர்களும் சதீஸ்குமாரை நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே இளைஞர் சதீஷ்குமார் அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் நேற்றிரவு பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதை அறிந்த சதீஷ்குமாரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டு கதறி அழுதனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் சதீஷ்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக தீவட்டிப்பட்டி போலீசில் சதீஷ்குமாரின் பெற்றோர் புகார் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சதீஷ்குமாரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ரயில்வே தண்டவாளம் அருகே உடல் கிடந்ததால், சேலம் ரயில்வே போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
மாரியப்பன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் மிரட்டியதாக கூறப்படும் நிலையில் இளைஞர் சதீஷ் குமார் ரயில்வே தண்டவாளம் அருகே பிணமாக கிடந்ததால் அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது.
இது குறித்து மாரியப்பனிடம் கேட்ட போது, ரூ.20 லட்சம் கொடுத்து புதிதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் கார் வாங்கினேன். பெரிய வடகம்பட்டியில் அந்த காரை நிறுத்தியிருந்த போது மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ்குமார் எனது கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
இது குறித்து அவரது வீட்டிற்கு சென்று சதீஷ்குமாரிடம் கேட்டேன். அப்போது அவரது தாய் காரில் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட செலவை நாங்கள் கொடுத்து விடுகிறோம் என கூறினார்.
பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கார் மீது மோதிய சதீஷ்குமார் நின்று பதில் சொல்லிவிட்டு வந்து இருக்கலாம் என கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டோம். நாங்கள் சதீஷ் குமார் வீட்டிற்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் காரில் மோதியது தொடர்பாக அவரது தாய்க்கும், அவருக்கும் ஏற்கனவே தகராறு நடந்து கொண்டிருந்தது.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு சதீஷ்குமார் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பது எங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தண்டவாளம் அருகே சதீஷ்குமார் பிணமாக கிடந்ததால் அவர் ரெயில் மோதி இறந்தரா? அல்லது அடித்து கொன்று அந்த பகுதியில் வீசி சென்றனரா? என்ற மர்மம் நீடிக்கிறது. இதனால் தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாரும் மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.
சதீஷ்குமார் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறி வருவதால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.