தமிழகத்தில் கல்வி துறையில் அதிக ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கல்வி துறையில் ஊழல் அதிகமாக உள்ளது என நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் ஆறு, குளங்களில் தூர்வாரி மணல் எடுக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக முதல்வரும் குளங்களில் மண் எடுக்க பணம் வாங்க கூடாது என்று தெளிவாக கூறியுள்ளார். குறிப்பாக பவானி சாகர் பகுதியில் மணல் எடுக்க ரூ.400 வரை பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். அரசின் உத்தரவுக்கு நேர்மாறாக தனியார் நிறுவனங்கள் மூலம் மணல் எடுத்து அவற்றை கூடுதல் விலைக்கு விற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு போதிய ஏற்பாடுகள் செய்யாததாலேயே சில இடங்களில் முறைகேடு நடக்கிறது. முறைகேடுகளை சரிசெய்யவில்லை எனில் ஆறு, குளங்களில் மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க உள்ளது. தற்போது சில தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. தமிழக கல்வி துறையில் ஊழல் அதிகமாக உள்ளது. தற்போது இத்துறையின் அமைச்சராக இருப்பவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்.
இது போல தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலையாக்க முயற்சி நடக்கிறது. இதில் நிலம் கையகப்படுத்தவும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
சென்னை முதல் செங்கல்பட்டு வரையிலான 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் எடுப்பதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே இச்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண இங்கு பறக்கும் சாலை அமைக்கலாமா? என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.