தமிழக சட்டசபை 14–ந் தேதி கூடுகிறது
தமிழக சட்டசபை இம்மாதம் 14–ம் தேதி (புதன்கிழமை) கூடுகிறது என சட்டசபை பொறுப்புச் செயலர் பூபதி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை செயலாளர் பொறுப்பு வகிக்கும் க. பூபதி, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கவர்னர் இந்திய அரசமைப்புப் பிரிவு 174, உட்பிரிவு 1–ன்கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை வரும் 14ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 1 மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று ஒவ்வொரு துறையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யவும், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1–ம் தேதிகளில் நடைபெற்றது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.
அதன்பிறகு அண்ணா தி.மு.க.வில் எழுந்த பிரச்சினைகளால் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித்துறை இருந்தது. கடந்த 23ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பிறகு, மார்ச் 16ம் தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டசபையில், 2017––2018ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20–ம் தேதி முதல் 24–ம் தேதி வரை நடைபெற்றது. ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தல் வந்ததால் அன்றே சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் சட்டசபை மீண்டும் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டசபை கூட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி கூட்டத்தொடரை இறுதி செய்து ஆணை வெளியிடப்பட்டது. சட்டசபை நடத்துவதற்கு புதிதாக கவர்னர் உத்தரவு பிறப்பித்தால் தான் முடியும்.
இந்நிலையில், வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது என கவர்னர் உத்தரவிட்டிருப்பதாக சட்டசபை செயலர் பூபதி அறிவித்துள்ளார்.