மட்கும் குப்பை, மட்காத குப்பையை பிரித்து வழங்குங்கள்: மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

சுற்றுப்புற சுகாதாரத்தினை மேம்படுத்திட பொதுமக்கள் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக பிரித்து வழங்கிட வேண்டும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (5–ந் தேதி) அம்மா மாளிகையில் மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தின உறுதிமொழியினை ஏற்று, 25 துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ.24,360 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.6,09,000 மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டிகளையும், பொதுமக்களுக்கு மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை பிரிப்பதற்காக ரூ.16.20 லட்சம் மதிப்பீட்டிலான 13,500 பச்சை மற்றும் 13,500 நீல நிறக் கூடைகளையும் வழங்கினார். சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்திட பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில் தெரிவித்ததாவது:– அண்ணா தி.மு.க.
ஆட்சியில் சாதனை
அம்மாவின் பொற்கால ஆட்சியில், கடந்த 5 ஆண்டு காலத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளிட்ட ஊரகப்பகுதிகள் ஆகியவற்றில் மொத்தம் 1,807 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டு காலத்தில், 303 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மட்டுமே, திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திமுக ஆட்சிக் காலத்தை விட, அம்மாவின் ஆட்சியில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு 1,504 கோடியே 40 லட்சம் ரூபாய், அதிகமாக செலவிடப்பட்டு, மகத்தான சாதனை படைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 5,400 மெட்ரிக் டன் குப்பையும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 7,597 மெட்ரிக் டன் குப்பையும், பேரூராட்சிப் பகுதிகளில் 1,967 மெட்ரிக் டன் குப்பையும், ஊரகப் பகுதிகளில் 2,340 மெட்ரிக் டன் குப்பையும், என தமிழகம் முழுவதும் மொத்தம் 17,304 மெட்ரிக் டன் குப்பைகள் தினசரி சேகரிக்கப்படுகின்றன. 2016-–17–ம் ஆண்டில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீதமுள்ள 3,524 கிராம ஊராட்சிகளிலும் ‘தூய்மை காவலர்களை’ ஈடுபடுத்தி திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அம்மாவின் பொற்கால ஆட்சியில், ஊராட்சிப் பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும், பிரிக்கவும், அவற்றை குப்பை கிடங்குகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக, அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளிலும், 65,988 தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
66 ஆயிரம் பேர்
தூய்மைக்காவலர்கள்
சேகரிக்கும் குப்பைகளை எளிதாக அப்புறப்படுத்தும் பொருட்டு, 22,704 மூன்று சக்கர மிதிவண்டிகள் மற்றும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
திடக்கழிவுகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற பணிகளுக்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், 65,988 பணியாளர்களை ‘தூய்மைக் காவலர்களாக’ தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயன்படுத்திவருகிறது.
இந்த முயற்சியால், மாநிலத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்புறச் சூழல்தினத்தன்று, தூய்மை இந்தியா திட்டம் மற்றும் தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 12 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இதுவரை 2,097 பணிகளுக்கு 969 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 4 இடங்களில் குப்பையிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள்
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில், புளியந்தோப்பு, ஓட்டேரி, வேலங்காடு, அத்திப்பட்டு ஆகிய நான்கு இடங்களில், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளும், குப்பையிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் 2 நிலையங்களும் அமைக்கப்பட்டு, அம்மா உணவகங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 141 இடங்களில், நாள் ஒன்றுக்கு 104 டன் மட்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில், தூய்மையான திருநெல்வேலி திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல்லாவரம், தாம்பரம் மற்றும் 32 நகராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வாங்கி, மட்காத குப்பையின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்து, மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள 528 பேரூராட்சிகளில் 466 பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக வீடுகளுக்கு சென்று மட்கும் குப்பை மட்காத குப்பை என பிரித்து வாங்கப்படுகிறது.
மட்கும் குப்பை மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என கேட்டுக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ், மத்திய சென்னை பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், வட சென்னை பாராளுமன்ற உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, தென் சென்னை பாரளுமன்ற உறுப்பினர் டி.ஜெ.ஜெயவர்தன், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி, தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்திய நாரயணன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்ஸாண்டர், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *