36,588 விவசாயிகளுக்கு ரூ.42.45 கோடி பயிர் காப்பீடு தொகை: அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் 36,588 விவசாயிகளுக்கு ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் பயிர் காப்பீடு தொகையினை மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:–
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையினை இன்றைய தினம் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 31.3.2016 வரை 29,702 சிறு விவசாயிகளுக்கு ரூ.178.06 கோடி மதிப்பீட்டிலும், 51,231 குறு விவசாயிகளுக்கு ரூ.138.96 கோடி மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 80,933 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.317.02 கோடி மதிப்பீட்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 286 கூட்டுறவு சங்கங்களில் காப்பீடு செய்யப்பட்டுள்ள 129 சங்கங்களின் 19,783 கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.27.89 கோடியும், 16,805 கடன் பெறாத விவசாயிகளுக்கு ரூ.14.56 கோடியும் என ஆகமொத்தம் 36,588 விவசாயிகளுக்கு ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் பயிர்காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாய பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் உற்பத்தியினை பெருக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கடலூர் மண்டல இணைப்பதிவாளர் சொ.இளஞ்செல்வி வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ரவிச்சந்திரன், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் வ.சி.கோமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் தனராஜா, கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் ஆர்.வி.பெருமாள் ராஜா மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சிதம்பரம் துணைப்பதிவாளர் க.ஜெகன்மோகன் நன்றி கூறினார்.