60 விவசாயிகளுக்கு ரூ.23 லட்சம் காப்பீட்டு தொகை: ஓ.எஸ். மணியன் வழங்கினார்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 60 விவசாயிகளுக்கு ரூ.22 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான பயிர்க் காப்பீட்டுத் தொகையினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு 2015–16 ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கும் விழா வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 60 விவசாயிகளுக்கு ரூ.22 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான பயிர்க்காப்பீட்டுத் தொகையினை வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:–
ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத 1 லட்சத்து ஆயிரத்து 684 விவசாயிகளுக்கு 2015–-2016 ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை ரூ.168.59 கோடி வரப் பெற்றுள்ளது.
இந்த தொகையில் இன்றைய தினம் திருமருகல் வட்டாரத்தில் உள்ள 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சார்ந்த 60 நபர்களுக்கு ரூ.22.34 லட்சம் மதிப்பிலான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளின் சேமிப்புக்கணக்கில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும்.
ரூ.144 கோடி விவசாய
கடன் தள்ளுபடி
மேலும் நடப்பாண்டில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம், பயிர்க்கடனாக ரூ.139 கோடி அளவிற்கு கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய சான்று பெற்று தாங்கள் அங்கத்தினர்களாக உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்து கடன் தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50,778 சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.144 கோடியே 42 லட்சம் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் 80% மக்கள் விவசாயம் செய்கிறார்கள். இயற்கையில் பருவகால மாற்றம் காரணமாக மழை பொய்த்து, அதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கென்று பெற்ற கடன் தொகையினை திருப்பிச் செலுத்த இயலாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.
விவசாயிகளின் இந்த துயர நிலையைப் போக்கிடவே தமிழக அரசு விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளது.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்திற்காக ரூ.55 கோடியும், சம்பா தொகுப்புத் திட்டத்திற்காக ரூ.65 கோடியும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு காலநிலைக்கு ஏற்றவாறு அவர்களது தேவையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு பயனுள்ள பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணாத வறட்சியை சமாளிக்க, தமிழக அரசு நீண்டகாலத் தீர்வாக குடிமராமத்துப் பணிகளையும், பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் பல குடிநீர்த் திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொது சேவை மையங்கள்
மேலும் பொதுமக்களின் வசதிக்காக தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சாதிச் சான்று, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதகை சான்று, சமூக நலத் துறையின் கீழ் திருமண உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் போன்ற அரசு சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இந்த வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் ஆர்.ரவி, பாத்திமா சுல்தானா, திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.