பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை தினமும் பெறாவிட்டால் சஸ்பெண்ட்: காவல் ஆய்வாளர்களுக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

அனைத்து காவல் நிலையங்களி லும் காவல் ஆய்வாளர்கள் தினமும் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற வேண்டும். மீறுபவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள பெரும் பாலான காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மக்களிடம் புகார்களை வாங்காமல் அலைக் கழிப்பதாகவும், மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு தீர்வுகாண சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, காவல் நிலையங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் காவல் நிலையங்களில் இருந்து பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் பற்றி முறையிட சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 8 முதல் 9 மணிவரையும் காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.
இந்த நேரங்களில் பொது மக்கள் ஆய்வாளர்களை சந்தித்து தங்களது புகார் மனுக்களை கொடுக்கலாம். ஆய்வாளர்கள் பணியில் இல்லாத நேரத்தில் பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை உதவி ஆய்வாளரிடம் அளிக்கலாம். பிறகு வாருங்கள் என்று பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது.
பெரும்பாலான காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வை நேரடியாக எனக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளேன். தேவைப்பட்டால் நானே நேரில் ஆய்வு செய்வேன். புகார் வாங்காத அல்லது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.
சென்னை மாநகரை பொறுத்தவரை போக்குவரத்தை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வார்தா புயலின் போது சேதம் அடைந்த போக்கு வரத்து சிக்னல்கள் விரைவில் சீரமைக்கப்படும். சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணியில், ஆபத்து அளவு குறைந்த பிறகே அருகில் உள்ள கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். ஆபத்தான சூழல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறையும்.
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றால் உரிய நட வடிக்கை எடுக்கப்படும். பெற் றோர்களே இது தொடர்பாக அவர் களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பைக் ரேஸில் ஈடுபடு பவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.
மெரினா கடற்கரையில் அனுமதி யின்றி போராட்டம் நடத்திய திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது விதிகளுக்கு உட்பட்டே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு மெழுகுவர்த்தி மட்டுமே ஏற்றியதுபோல சித்தரிப்பது தவறானதாகும்.
மெரினாவில் போராட்டம் நடத்து வதற்கு அனுமதி கிடையாது. போராட்டம் நடத்துவதற்கென அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும். சென்னையில் ஆள் இல்லா கண்காணிப்பு விமானங்களை பறக்க விட்டாலும், டாஸ்மாக்கில் சட்டவிரோத விற்பனை குறித்து புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக் கப்படும் என்றார். பேட்டியின் போது கூடுதல் காவல் ஆணையர்கள் சேஷசாயி, ஜெயராம், துணை ஆணையர்கள் ராதிகா, விமலா, திருநாவுக்கரசு உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *