வடபழனி தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம்: அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் கைது- கொலை குற்றத்துக்கு இணையான பிரிவில் வழக்கு
வடபழனி தீ விபத்தில் சிக்கி 4 பேர் இறந்த விவகாரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை குற்றத்துக்கு இணையான குற்றம் செய்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோயில் தெருவில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது. தரை தளத்துடன் சேர்த்து 6 தளங்கள் இருந்தன. 6 வது தளத்தில் வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் குடும்பத்துடன் வசித்து வந்தார். மொத்தம் உள்ள 28 வீடுகளில் 22 வீடுகளில் ஆட்கள் வசித்து வந்தனர்.
வீட்டின் முதல் மாடியில் மீனாட்சி (65) என்பவர் தனது மகள் செல்வி (40) உடன் வசித்து வந்தார். தரை தளத்தின் நடுவில் பைக் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் 8ம் தேதி அதிகாலை தரை தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், அங்கு நிறுத்தப்பட்டி ருந்த 21 பைக்குகளும் ஒரே நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம் மாடிகளுக்கும் பரவியது. அனைத்து வீடுகளிலும் புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது. அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது புகை மூட்டம் சூழ்ந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பலர் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து 15 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தினால் ஏற்பட்ட நச்சுப் புகை கட்டுக்குள் வர நீண்ட நேரமாகியது.
இதற்கிடையில், தீ விபத்து புகை மூட்டத்தில் சிக்கி முதல் தளத்தில் வசித்து வந்த மீனாட்சி (65), அவரது மகள் செல்வி, செல்வியின் பேரக்குழந்தைகள் சந்தியா, சஞ்சய் ஆகியோர் உயிர் இழந்தனர். பலத்த காயமடைந்த 8 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து உயிர் இழந்த சஞ்சய்யின் தந்தை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் (38) வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆய்வாளர் சந்துரு இயற்கைக்கு மாறான மரணம் (174 சிஆர்பிசி) என்ற பிரிவில் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே சீல் வைத்திருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜன்னல் மற்றும் காற்றோட்ட வசதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டதால் அது பொது மக்கள் வாழ தகுதியற்றது என வடபழனி போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், கொலை குற்றத்திற்கு இணையான குற்றம் புரிதல் (304 (2)) என்ற பிரிவின் கீழ் வடபழனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் விஜயகுமாரை நேற்று மாலை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
ஒருவர் செய்யும் செயல் மரணத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் அல்லது மரணத்துக்கு இணையான கொடுங்காயத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் ஒரு செயலை செய்தால் அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க முடியும் என்பது சட்ட விதி.