விண்ணில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்களை செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறினார்.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட் ஹரிகோட்டாவில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறியதாவது:

அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய வெற்றி. ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் தொழில்நுட்பம் ஒரு தொடக்கமே. இந்த தொழில்நுட்பம் வளர வளர மிக அதிக எடையுள்ள செயற்கைக் கோள்களையும் நம்மால் அனுப்ப முடியும். அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் ஏவும் செலவைக் குறைக்க இஸ்ரோ பல முயற்சிகளை எடுத்து வருகிறது. வடிவம், தொழில்நுட்ப மாற்றம், எடை குறைப்பு உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக் கோள்களின் எடையைக் குறைப் பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ‘ஆதித்யா’, ‘சந்திரயான்-2’ செயற் கைக்கோள்களைத் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகு, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டப் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு கிரண்குமார் கூறினார்.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டின் திட்ட இயக்குநர் ஜி.ஐயப்பன் கூறும்போது, ‘‘ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டுடன் பொருத்தப் பட்டுள்ள கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலான தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இதற்காக கிரையோஜெனிக் இன்ஜின் செயல்பாட்டை 200 முறைக்கு மேல் சோதனை செய்தோம். எங்கள் தொடர் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதேபோல, ஜிசாட்-19 தகவல்தொடர்பு செயற்கைக்கோளும் முந்தைய செயற்கைக்கோள்களைவிட அதிக திறன் படைத்தது. ஒரே நேரத்தில் 2 மிகப்பெரிய சவால்களில் வெற்றிகண்டுள்ளோம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *