3 பெண்களை கொன்ற வழக்கில் இருவருக்கு தூக்கு: நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நாமக்கல் மோகனூர் சாலை முல்லை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிந்து(33). மருத்துவர். இவர் தனது குழந்தை, தாயார் சத்யவதி(55), பாட்டி விசாலாட்சி(75) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல், சிந்து உட்பட அவரது தாயார், பாட்டி ஆகி யோரை கை, கால்களை கட்டி கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொலை செய்தது. மேலும், வீட்டில் இருந்த 28 பவுன் நகையையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. சம்பவத்தன்று சிந்துவின் பெண் குழந்தை பள்ளி சென்றிருந்ததால் தப்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சென்னையைச் சேர்ந்த சந்தானம்(28), வாணியம்பாடி காமராஜ்(33), பரமத்தி வேலூரைச் சேர்ந்த இளங்கோ(27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 59 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் கொலை வழக்கில் கைதான காமராஜ், இளங்கோ ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று அளித்த தீர்ப்பில், 3 பேரை கொடூரமாக கொலை செய்த காமராஜ், இளங்கோ ஆகியோரை சாகும் வரை தூக்கிலிடும்படி உத்தரவிட்டார். மேலும், கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த சந்தானம் கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த தீர்ப்பு குறித்து நாமக்கல்லில் உள்ள சிந்துவின் சித்தி உமாதேவி கூறியதாவது: எனக்கு குழந்தை இல்லை. இதனால் சிந்துவை என்னுடைய வளர்ப்பு மகளாக கருதி வளர்த்து படிக்க வைத்தேன். ஒரே நாளில் குடும்ப உறவுகள் 3 பேரை இழந்து கடந்த 6 ஆண்டுகளாக நடை பிணமாய் வாழ்ந்து வருகிறேன். குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை எனக்கு ஆறுதலை அளிக்கிறது. இந்த தீர்ப்பு இதுபோன்ற கொடும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு பாடமாக இருக்கும்’’ என்றார்.
கரூர் கொலையிலும் தொடர்பு
நாமக்கல்லில் பெண் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து 3 மாதங் களுக்குப் பிறகு, கரூர் மாவட்டத்தில் 3 பெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் சந்தானம், காமராஜ், இளங்கோ ஆகிய 3 பேருக்கும் தொடர்பிருப்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.