‘வேலையில்லா பட்டதாரி 2’ புது போஸ்டர் வெளியீடு: டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது
தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இன்ஜினீயரிங் பட்டதாரியின் வேலை தேடும் அவஸ்தையையும், வேலையை தக்க வைத்துக்கொள்ள போராடும் முயற்சியையும் பதிவு செய்த படம் இது. தனுஷுக்கு வணிக ரீதியிலான வெற்றியைக் கொடுத்த விதத்திலும் ‘வேலையில்லா பட்டதாரி’க்கு முக்கியமான இடம் உண்டு. இது தனுஷின் 25-வது படமும் கூட.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘வேலையிட்டா பட்டதாரி 2’ படம் சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தமிழ், தெலுங்கு டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.