‘கொடி வீரன்’ அப்டேட்: விக்ரம் சுகுமாரன் வில்லனாக ஒப்பந்தம்
‘கொடி வீரன்’ படத்தில் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முத்தையா இயக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார். மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பால சரவணன் ஆகியோருடன் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க விக்ரம் சுகுமாரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சசிகுமார் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
முத்தையா சாதியப் பெருமைகளை பதிவு செய்யும் படங்களை இயக்குபவர். விக்ரம் சுகுமாரன் சாதியைப் பகடி செய்து, விமர்சனத்துக்குள்ளாக்கி ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கியவர். தற்போது ‘கொடி வீரன்’ படத்துக்காக இவர்கள் இருவரும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் சுகுமாரன் நடிக்கும் முதல் படம் ‘கொடிவீரன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை கம்பெனி புரொடக்ஷன்ஸ் மூலம் சசிகுமார் தயாரிக்கிறார். ரகுநந்தன் இசையமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.