காஷ்மீர் பிரச்சினை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முறையிட முடியாது: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதில்
காஷ்மீர் பிரச்சினை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானால் முறையிட முடியாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக தலைமையி லான அரசு அமைந்து 3 ஆண்டு கள் முடிவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நாட்டுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறோம். ஆனால் தீவிரவாத தாக்குதலும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஏவப்படும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களை அந்த நாடு முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். அதன்பிறகு தான் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடியும்.
அதேநேரம் இரு நாடுகளுக்கு இடையிலான இந்தப் பிரச்சினையில் மூன்றாம் தரப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தானால் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட முடியாது.
இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.