அம்மா உணவகத்தில் தரம் இல்லாததால் ‘மவுசு’ குறைந்தது

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக தொடங்கி வைத்த ‘அம்மா’ உணவகம் தரம் இல்லாததால் மவுசு குறைந்து வருகிறது.
2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அம்மா உணவகத்தை சென்னையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்கள் பசியாற தொடங்கி வைத்தார். சென்னையில் மாநகராட்சி சார்பில் 407 இடங்களில் அம்மா மலிவு உணவகங்கள் செயல்பட்டு வந்தன. பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் அமோக வரவேற்பை பெற்றது.
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஏழை, எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், டிரைவர்கள், பாரம் சுமப்பவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் காலை, மாலை, இரவு நேரங்களில் இந்த உணவகங்களில் உணவு சாப்பிட்டு பயன் பெற்றனர். காலையில் ஒரு இட்லி ரூ. 1-க்கும் பொங்கல் ரூ. 5-க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ 5 -க்கும், எலுமிச்சை சாதம் ரூ. 5 -க்கும் கருவேப்பிலை சாதம் ரூ. 5, தயிர்சாதம் ரூ. 3 க்கும் இரவு 2 சப்பாத்தி ரூ. 3 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் பயன் பெற்றனர்.
இத்திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விரிவு படுத்தப்பட்டது
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5- ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவனையில் மரணம் அடைந்தார்.
இதனால் அம்மா உணவகங்கள் சரிவர பராமரிப்பு இன்றியும் கண்காணிக்கப்படாமலும் வந்தது.
இதையொட்டி சென்னையில் தினமும் 3.5 லட்சம் பேர் பயன் பெற்று வந்த அம்மா உணவகத்தில் பயனாளிகளின் வருகை 1.8 லட்சமாக குறைந்தது.
தினமும் 4.05 லட்சம் இட்லி விற்பனை 3.01 லட்சமாக குறைந்தது.
விற்பனை குறைவு கடந்த மே மாதம் 15-ந்தேதி கணக்கெடுப்பில் 3 லட்சத்து 474 இட்லியும், 88,323 பிளேட் சாதமும் 1 லட்சத்து 4008 சப்பாத்தியும் விற்பனையாகி உள்ளது.
இந்த விற்பனை குறைவுக்கு உணவு தரமில்லாததும் மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் மீது அலட்சியம் செய்வதும் காரணமாக கூறப்படுகிறது. அம்மா உணவகங்கள் மீது அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி ஏழை மக்களுக்கு மீண்டும் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
2016- பிப்ரவரி மாதம் ‘அம்மா குடிநீர்’ சென்னையில் 100 இடங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 49- இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் நிலையங்கள் உருவாக்கப்பட்டது. ஏழை மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு மூலம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. 18 லட்சம் மக்கள் பயன் பெற்றனர்.
தற்போது இந்த குடிநீர் திட்டமும் சரிவர செயல்படவில்லை. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாமல் முடங்கும் சூழ்நிலையில் உள்ளது.
சென்னையில் அனைத்து பொருட்களும் ஒரே இடங்களில் கிடைக்கும் வண்ணம் குறைந்த விலையிலான ‘அம்மா வார சந்தை’ தொடங்க திட்டமிடப்பட்டது இதற்காக ஆர்.கே.நகர், அரும்பாக்கம், தரமணி, அசோக்நகர், உள்ளிட்ட இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சந்தை தொடங்கும் பணி நடந்து வந்தது. தற்போது இந்த வாரச்சந்தைகளும் பராமரிப்பு இல்லாமல் முடங்கி வருகிறது.
அம்மா மலிவு விலை மருந்தகங்கள் முறையாக அதிகாரிகள் பராமரிப்பு இல்லாததால் மருந்து விற்பனை குறைந்து வருகிறது. மொத்தத்தில் தமிழக அரசும், அதிகாரிகளும் இந்த திட்டத்தில் கவனம் செலுத்தாததால் ‘அம்மா திட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு முடங்கி வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அம்மா மலிவு விலை உணவகம், மருந்தகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வாரச்சந்தை திட்டங்கள் அனைத்துக்கும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தனியாக நிதி ஒதுக்கீடு செய்து பராமரித்து வந்தார். தற்போது முதல்-அமைச்சர் மறைவையொட்டி இந்த திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு வரவில்லை.
2014-15-ம் ஆண்டுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 100 கோடி நிதி ஒதுக்கிடு செய்து இருந்தார். தற்போது இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்க தணிக்கை துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மாநகராட்சிக்கு இந்த திட்ட செலவு குறித்து விளக்கம் கேட்டு வருகிறது.
இதனால் இந்த திட்டம் மீது அதிகாரிகள் கவனம் செலுத்த தயங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *