அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த மக்கள் விரும்புகிறார்கள்: மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும், உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று நல்லாட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தான உடனே சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டப்படவில்லை.
எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் சபாநாயகரை சந்தித்து சட்டசபையை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினோம். இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது.
ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
ஆனால் அ.தி.மு.க. கட்சியின் சூழ்நிலையை பார்த்தால் அவை நடைபெறுமா? என்ற சந்தேகம் உள்ளது.
தி.மு.க. எப்போதுமே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும். இந்த கூட்டத்தொடரிலும் மக்கள் பிரச்சனையை தெளிவாக எடுத்து கூறுவோம்.
இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும், உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று நல்லாட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
எவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் மக்களுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.