இரட்டை இலை விவகாரம்: சசிகலா அணி சார்பில் மேலும் 73,661 பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனிடம் தாக்கல்

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக சசிகலாவின் அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் நேற்று தேர்தல் கமிஷனிடம் மேலும் 73 ஆயிரத்து 661 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக சசிகலாவின் அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் நேற்று தேர்தல் கமிஷனிடம் மேலும் 73 ஆயிரத்து 661 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா அணியினரும் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்காக தங்கள் தரப்பில் தேவையான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
ஆனால் அந்த சின்னத்தை முடக்கிய தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை இரு அணியினரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டதோடு சசிகலா அணிக்கு அ.தி.மு.க.(அம்மா) என்ற பெயரையும், தொப்பி சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரையும், இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது.
அத்துடன், இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது பற்றி முடிவு எடுக்க வசதியாக, இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை ஜூன் 16-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று கடந்த ஏப்ரல் 20-ந் தேதி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இரு அணியினரும் தங்கள் தரப்பிலான ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், தாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று நிரூபிக்கும் வகையில் சசிகலாவின் அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ராகேஷ் சர்மா மேலும் 73 ஆயிரத்து 661 பிரமாண பத்திரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தார்.
இதுவரை தங்கள் தரப்பில் பல்வேறு மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட மொத்தம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 287 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து இருப்பதாக ராகேஷ் சர்மா தெரிவித்தார்.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இரு அணியினரும் போட்டி போட்டு பிரமாண பத்திரங்கள் அடங்கிய கட்டுகளை லாரியில் எடுத்துச் சென்று தேர்தல் கமிஷனிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *