துணைவேந்தர் நியமனம் அவசர சட்டத்தால் ஊழல் ஒழியாது: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

துணைவேந்தர் நியமனம் அவசர சட்டத்தால் ஊழல் ஒழியாது என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத்திருத்தி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத்தால் மட்டுமே பல்கலைக்கழகங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழலையும் தடுத்து விட முடியாது. அதுமட்டுமின்றி, இந்த அவசரச் சட்டம் பல வி‌ஷயங்களில் தெளிவாக இல்லை என்பதால் அந்தச் சட்டத்தாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

பல்கலைக்கழகங்களின் ஊழல் துணைவேந்தர்கள் நியமனத்தில் தான் தொடங்குகிறது. அதனால் தான் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழலை ஒழித்து, வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அவசரச் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றிருக்கிறது. ஆனால், அந்த அவசரச் சட்டம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அருமருந்து அல்ல என்பது தான் பா.ம.க. நிலைப்பாடு.

புதிய அவசரச் சட்டத்தின்படி தமிழகத்திலுள்ள 12 பல்கலைக்கழகங்களுக்கும் திறமையான துணை வேந்தர்கள் நேர்மையான முறையில் நியமிக்கப்படுவர் என்று ஆளுனர் தரப்பில் நம்பிக்கைத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அது சாத்தியம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் ஆளுனர் சார்பில் ஓர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுவார்; தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி அல்லது தலைசிறந்த கல்வியாளர் நியமிக்கப்படுவார்; பல்கலைக்கழக செனட் சார்பில் மூன்றாவது உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பல்கலைக் கழகங்கள் சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினர் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளின் தாளாளர்களாகவோ, முதல்வர்களாகவோ இருக்கின்றனர் என்பது தான் கடந்த கால அனுபவங்களில் இருந்து தெரியவந்துள்ள உண்மையாகும்.

பெரும்பான்மையான தனியார் கல்லூரிகளின் தாளாளர்கள் பட்டப் படிப்பை முடிக்காதவர்களாக உள்ளனர். அவர்களைக் கொண்டு பட்டம் வழங்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வது எந்த அடிப்படையில் சரியாக இருக்கும். இத்தகைய தனியார் கல்லூரிகளின் தாளாளர்கள் தான் தங்களுக்கு வளைந்து கொடுக்கும் ஒருவரை துணைவேந்தராக்குகின்றனர்.

அவ்வாறு நியமிக்கப்படும் துணை வேந்தர்கள் தனியார் கல்லூரிகளின் கைப்பாவையாக மாறி அனைத்து ஊழல்களுக்கும், விதிமீறல்களுக்கும் துணை போகின்றனர். இதைத் தடுக்க பல்கலைக்கழக செனட் சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினருக்கான தகுதி தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, துணை வேந்தர் தேர்வுக்குழுவின் உறுப்பினராக உள்ள அனைவரும் துணை வேந்தருக்கான தகுதியை விட கூடுதல் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதை தமிழக சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டவுள்ள சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

துணைவேந்தர் நியமனத்திற்கான அனைத்து நடை முறைகளும் வெளிப்படையாக அமைய வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு குறைந்தபட்ச பணி அனுபவம், வயது, முனைவர் பட்ட ஆய்வுக்கு வழி காட்டிய அனுபவம், எழுதி வெளியிட்ட நூல்கள் உள்ளிட்ட தகுதிகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களையும், அவர்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பெயர்களையும் தேர்வுக்குழு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கடைசியாக ஆளுனருக்கு பரிந்துரைக்கப்படும் 3 பேரின் விவரங்களும், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மக்கள் ஆய்வுக்காக தேர்வுக் குழு வெளியிட வேண்டும். அப்போது தான் துணை வேந்தர் நியமனத்தில் ஊழலை ஒழிக்க முடியும்.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் எடுத்துக் கொண்டால், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை நியமித்தல், கட்டுமானம் மற்றும் கொள் முதல் ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலும் பெரும் ஊழல் நடைபெறுகிறது. உதாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லத்துரை, 263 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்திருக்கிறார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து வரும் 15ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள துணை வேந்தர் சுவாமிநாதன் அதற்கு 3 நாட்கள் முன்பாக ரூ.30 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்க விருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. கல்வி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய துணை வேந்தர்கள், கட்டுமான ஒப்பந்தம், ஆசிரியர்கள் நியமனம் போன்றவற்றில் நேரத்தை வீணடிப்பது சரியல்ல. இந்த அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளிலிருந்து துணைவேந்தர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். கட்டிடங்களுக்கான கட்டு மானப் பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்க தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிய விரிவான சட்டத்தை உருவாக்குவதன் மூலம் தான் பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க முடியும். உயர்கல்வியின் நலன் காப்பதற்காக இதை செய்ய ஆளுனரும், அரசும் முன்வர வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *