ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த திருவண்ணாமலை ராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். தமிழக அரசின் சார்பாக ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில், அமைச்சர் வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பி.பகலவன், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் தூசி.கே.மோகன் (செய்யார்), வி.பன்னீர்செல்வம் (கலசபாக்கம்), கே.வி.சேகரன் (போளுர்), திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, துணை காவல் கண்காணிப்பாளர் (ஆரணி) ஜெரீனாபேகம் மேற்கு ஆரணி ஒன்றிய முன்னாள் சேர்மன் கே. சங்கர், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி. பாபு, நகர பாசறை நிர்வாகி பி.ஜி. பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் கொளத்தூர் திருமால், புங்கம்பாடி சாமுண்டீஸ்வரி சுரேஷ், மேல்நகர் எம்.சி.ரவி, நகர பாசறை நிர்வாகி பி.ஜி. பாபு, ஒன்றிய பிரதிநிதி புலவன்பாடி ஆர்.சுரேஷ்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும், தென் பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஆர்.கே.ஆனந்த், தனது மனைவி அனுபமா ஆனந்த்துடன், தேப்பனந்தல் கிராமத்திற்கு வருகை புரிந்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தொிவித்து, தென் பிராந்திய ராணுவத்தின் சார்பாக ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்கினார். மேலும், திருவண்ணாமலை ராணுவ கேன்டீன் சார்பாக ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த கோபால் மற்றும் சின்னபொண்ணு தம்பதியரின் மகன் மணிவண்ணன் (வயது 24) பி.எஸ்.சி. பட்டதாரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். மணிவண்ணனுக்கு மஞ்சுளா, ஆனந்த் ஆகிய இரண்டு மூத்த சகோதரி, இளைய சகோதரர் உள்ளனர்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணன் உடல் ராணுவ சவப்பெட்டியில் வைக்கபட்டு, ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் தென் பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி, அமைச்சர், கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ராணுவ வீரர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடன் சென்றனர்.
அடக்கம் செய்யப்படும் இடத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணன் உடல் வைக்கப்பட்டு, தென் பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி, அமைச்சர், கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், ராணுவ அதிகாரிகளால் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
24 குண்டுகள் முழங்க…
மேலும், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணன் உடலின் மேல் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி ராணுவ வீரர்களால் அவரின் தாயாரிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள் (3 சுற்றுகள்) 24 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி சுட்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதனை பின்னர் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.