தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறோம்: ஜெயக்குமார் பேட்டி
டிடிவி.தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்த டிடிவி.தினகரன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை திரும்பிய டி.டி.வி.தினகரன், மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், நேற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக டி.டி.வி.தினகரன் சென்றார். அங்கு செல்லும் முன்பாக பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், “அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் அறிவுரையின்படி தனது எதிர்கால பயணம் இருக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில், சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறைக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வந்து ஆலோசனை நடத்தினார்கள்.
கூட்டம் முடிந்ததும், அமைச்சர்கள் அனைவரும் ஜெயக்குமார் தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
அதன்பிறகு, வெளியே வந்த அமைச்சர்களில் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை கூடுகிற சமயத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அமைச்சர்களையும் அழைத்து, அதன் அடிப்படையில் சட்டசபையில் ஜெயலலிதாவின் கனவு, லட்சியங்களை நிறைவேற்றுகிற வகையில் அவரவர் மானியத்தின் போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என்ற அறிவுரையை வழங்குகின்ற கூட்டம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்த கூட்டத்தில் எதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது?
பதில்:- ஏப்ரல் 17-ந் தேதியன்று, மின்சாரத்துறை அமைச்சரின் இல்லத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அனைவருமே ஒன்றுகூடி ஒருமித்த உணர்வோடு, ஒருமித்த கருத்தோடு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய மாபெரும் இயக்கமான, 1½ கோடி தொண்டர்களோடு ஜெயலலிதா வழிநடத்திய அண்ணா தி.மு.க.வை காக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவால் ஏற்பட்ட இந்த ஆட்சியை தொடர்ந்து 2020-–21 ஆண்டு வரை நடத்திட வேண்டும், அதன்பின்னரும் ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்து மலர்ந்திட வேண்டும் என்ற அடிப்படையிலும், கட்சி-ஆட்சி நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு டி.டி.வி.தினகரன் சார்ந்தவர்களை கட்சியில் இருந்து முழுமையாக விலக்கி வைத்தல் எனும் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த ஆட்சி மக்கள் பாராட்டும் போற்றும் வகையில் இருந்து வருகிறது.இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்து கட்சி பணியை மீண்டும் தொடருவேன் என்று கூறும்போது, அதுதொடர்பான விளக்கத்தை அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.
ஏப்ரல் 17-ந் தேதியன்று எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவின் அடிப்படையில், அன்றைய தினம் இரவே, ‘நான் கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன், அம்மா ஆட்சி தொடர்வதற்கு எந்தவித இடையூறும் என்னால் வராது’ என்று டி.டி.வி.தினகரன் கூறினார். அந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியோடு இருக்கவேண்டும்.
தினகரன் தொடர்பு இல்லை
ஏப்ரல் 17-ந் தேதியன்று என்ன முடிவு எடுத்தோமோ, அதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். டி.டி.வி.தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்களை சார்ந்தும் நாங்கள் இல்லை. அவர்களின் பின்னணியிலும் இல்லை.
யாருடைய பின்னணியும் இல்லாமல் ஜெயலலிதா அரசை நாங்கள் வழிநடத்தி கொண்டிருக்கிறோம். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தினகரனை கிளைக் கழகத்தில் இருந்து எந்த நிலையில் உள்ளவர்களும் சந்திக்க மாட்டார்கள். எங்களது நிலைப்பாட்டை பற்றித் தெளிவாகச் சொல்லி விட்டோம். அவர்களைச் சார்ந்து நாங்கள் இல்லை.
சிறப்பான ஆட்சி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் ஜெயலலிதா அரசை வழிநடத்தி சென்றுகொண்டிருக்கும்போது, எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். கட்சி தொண்டர்களும் தெளிவாகவே இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரனை நிச்சயமாக யாரும் எந்த அளவிலும் சந்திக்க மாட்டார்கள். அந்த உறுதியோடு இருக்கிறோம். இந்த ஆட்சி 5 ஆண்டு காலம் தொடர வேண்டும் என்பதே எங்களது இலக்கு.
கேள்வி:- 10 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்திக்க சென்றிருக்கிறார்கள்?
பதில்:- இது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த கேள்வி. எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. முழுமையான அளவுக்கு அவர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில், தற்போது ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். எனவே இப்போது இருக்கின்ற பிரச்சினை ஜெயலலிதா ஆட்சி 5 ஆண்டுகளும் நடக்கவேண்டும், அதன்பின்னரும் தொடரவேண்டும் என்பது தான். அது தான் எங்களின் இலக்காக இருக்கிறது.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.