2 மாதம் பொறுமையாக இருக்க சொன்னார் சசிகலா: தினகரன் பேட்டி
பெங்களூரு சிறையில் சசிகலாவை டிடிவி.தினகரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த இரு அணிகளும் இணைய 2 மாத கால அவகாசம் கொடுப்போம். ஆகவே 2 மாதம் பொறுமை காக்குமாறு சசிகலா தன்னிடம் கூறியதாக தினகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அண்ணா தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் சசிகலாவை அவருடைய உறவினரும், அண்ணா தி.மு.க.(அம்மா) அணி துணை பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன், நேற்று நேரில் சந்தித்து பேசினார். மதியம் 3.35 மணிக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வந்த அவர் 3.55 மணிக்கு சிறைக்குள் சென்றார்.
அவருடன் மனைவி அனுராதா மற்றும் ஒரு உறவுக்கார பெண் ஆகியோரும் சென்றனர். அவர் சசிகலாவை சந்தித்து 1¼ மணி நேரம் பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கட்சி விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அதன் பிறகு மாலை 5.20 மணிக்கு சிறையை விட்டு டி.டி.வி.தினகரன் வெளியே வந்தார். அங்கு நிருபர்களுக்கு டி.டி.வி.தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–-
2 மாதங்கள் பொறுமை
சிறையில் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து, கட்சி நிலவரம் குறித்து பேசினேன். அப்போது அவர் என்னிடம், இன்னும் 2 மாதங்கள் பொறுமையாக இருங்கள். அதற்குள் கட்சியில் இரு அணிகளும் இணைகிறதா? என்று பார்க்கலாம். ஒருவேளை இந்த இணைப்பு நடக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக முடிவு எடுக்கலாம், எப்படி செயல்பட வேண்டும் என்று என்னிடம் சசிகலா கூறியிருக்கிறார். அதுவரை அண்ணா தி.மு.க.வினரை வழக்கம்போல சந்திப்பேன்.
இந்த 2 மாத காலத்தில் நான் கட்சியை பலவீனம் அடைய விடாமல் பார்த்துக் கொள்வேன். என்னை கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்தவர் பொதுச் செயலாளர். அவரை தவிர வேறு யாரும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது.
இரட்டை இலை சின்னம் கிடைத்து, வெற்றி பெறுவதற்காக ஒதுங்கியிருக்கக் கேட்டுக்கொள்கிறார்கள். அண்ணா தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதைத் தடுக்க எங்களுக்குத் தெரியும். அப்போது சசிகலா கூறியுள்ளபடி, நாங்கள் செயல்படுவோம். அண்ணா தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியம். அதற்கு பின்னடைவை ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
வானளாவிய அதிகாரம் படைத்த அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதற்கும், கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.
டி.டி.வி.தினகரனுடன் நாகராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், தங்கதுரை, ஜக்கையன், ஏழுமலை, கதிர்காமு, ஜெயந்தி ஆகியோர் வந்திருந்தனர். ஒரு எம்.பி., 11 எம்.எல்.ஏ.க்கள் அவருடன் வந்திருந்தனர்.