விரைவில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தகவல்

திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை இணைந்து உலக சுற்றுச் சூழல் தினவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அப்போது கழிவுகள் மேலாண்மை விதிகளை நடைமுறைப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் சுருக்கத் தொகுப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கை புத்தகம் ஆகியவற்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவை தற்போது மாசடைந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக கழிவுகள் அதிகளவில் உருவாவதே இதற்குக் காரணம். நீர் மாசுபடுவதைத் தடுக்க அரசு பாதாள சாக்கடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. திடக்கழிவுகளை எரிப்பதன் மூலம் உருவாகும் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை; கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சாயப் பட்டறை கழிவுகளை சுத்திகரிப்பதற்காக ரூ.900 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுநீரை சுத்திகரித்து தூய்மைப்படுத்தும் 2 புதிய யந்திரங்கள் ரூ.1.50 கோடி செலவில் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் முதற்கட்டமாக இந்த யந்திரங்கள் நிறுவப்படும். நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை இந்த யந்திரம் சுத்திகரிக்கும்.
கடல் அரிப்பைத் தடுக்க ரூ.660 கோடியில் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் எச்.மல்லேசப்பா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலர் முஹம்மது நசிமுதீன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலர் நா.சுந்தரகோபால், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ்.செல்வன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *