அதிமுக அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை; 2021 வரை எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்வார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

அதிமுக ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. 2021 வரை எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்வார் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்பதற்காக முதல்வர் 8 மாவட்டங்களைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்துள்ளார். தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து எம்.எல்.ஏக்களிடம் அவர் கேட்டறிந்தார்.

அதிமுக ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. 2021 வரை அதிமுக ஆட்சி தொடரும். எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்வார். 2021க்குப் பிறகும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடரும்.

என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அவர் பேச்சை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை. அதைப் புறக்கணித்து விடுங்கள்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தினகரனை தனிப்பட்ட முறையில் சந்திக்கின்றனர். அரசியல் ரீதியாக இருக்காது. எனவே, தனிப்பட்ட சந்திப்பை அரசியலாக்கக் கூடாது. தினகரனை எம்.எல்.ஏக்கள் சந்தித்ததால் பெரும்பான்மைக்கு பாதிப்பு இல்லை.

கட்சியில் வழிகாட்டும் குழு உள்ளது. அந்தக் குழுவினர்தான் கட்சியை வழிநடத்துகின்றனர். அதனால் கட்சியை வழிநடத்துவது குறித்து எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆட்சியைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறம்பட வழிநடத்துகிறார்” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *