குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து பசுமைத் தாயகம் சார்பில் சென்னையில் விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5-ம் தேதி (நேற்று முன்தினம்) அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி பல இடங் களில் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. மேலும் குப்பைகளைத் தரம் பிரித்து கொடுப்பதன் அவசியம் குறித்த துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் சவுமியா அன்புமணி கூறியதாவது:
இந்தியாவில் அதிக குப்பைகளை உற்பத்தி செய்யும் மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. அதிக குப்பைகளை உருவாக்கும் நகரம் சென்னை. இதற்குக் காரணம் மக்கள் நெருக்கம்.
இதனால் மூச்சுத் திணறல், தோல் நோய் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. ஆஸ்துமா, குழந்தையின்மை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணம் குப்பைதான். குப்பையைத் தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். ஈரக் கழிவு, உலர் கழிவு என பிரித்துக் கொடுத்தால், மாநகராட்சி தனித்தனியாகக் கொண்டு செல்ல வேண்டும். ஒன்றாக ஒரே இடத்தில் கொட்டக்கூடாது.
இதுதான் முறையான திடக்கழிவு மேலாண்மை. நம்மிடம் முறையான திட்டம் இல்லை. தனித்தனியாக வண்டிகளை மாநகராட்சி அனுப்பினால் 95 சதவீத குப்பைகளை ஒழித்துவிடலாம் என்றார்.