மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளி நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்: காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளி நுழை வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து சென்னையில் மாணவர்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் பாதுகாப்பு சம்பந்தமாக போலீஸ் அதிகாரிகள் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.
கூடுதல் காவல் ஆணையர்கள் கே.சங்கர், எச்.எம்.ஜெயராம் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், 300 பள்ளிகளில் இருந்து தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் ஆலோசனை
அவர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழிகாட்டு தல்படி போலீஸ் அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள்:
- அனைத்து பள்ளிகளிலும், உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். முக்கியமாக பள்ளி நுழைவு வாயில் மற்றும் சாலை தெரியும்படி கேமராக்கள் அமைக்க வேண்டும்.
-
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி வாகனங் களில் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்கும் போது, காவல்துறையில் நன்னடத்தை சான்று பெற்று வரவேண்டும் என வலியுறுத்த வேண்டும். மேலும், அவர்களது முகவரி, சொந்த ஊர் மற்றும் பிற விவரங்களை குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
-
பள்ளி வாகனங்களை நன்கு பராமரித்து வைத்துக் கொள்வதுடன், அவ்வப்போது அதன் இயக்கம் மற்றும் உட்புறம் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
-
தனியார் ஆட்டோ மற்றும் வாகனங்களில் மாணவர்களை அழைத்து செல்லும் நபர்களின் முழு விவரங்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்து தெரிந்துகொண்ட, பின்னரே மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நியமிக்க வேண்டும். மேலும், அந்த ஆட்டோ மற்றும் தனியார் வாகன ஓட்டுநர்களின் விவரங்களை பள்ளிக்கு தெரிவிக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
-
பள்ளிகளிலிருந்து மாணவர் களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை, பள்ளியின் வாசலிலிருந்து அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
-
பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாப்பாக வந்து செல்வது குறித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களுடன் மாதம் ஒருமுறை கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்க வேண்டும்.
-
வாகனங்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களை, பள்ளியின் வாசலில் இறக்கி விடுவதற்கும், ஏற்றிச் செல்வதற்கும் தனியாக இடம் ஒதுக்கித் தந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வழிவகை செய்ய வேண்டும்.
-
தங்கள் பள்ளிக்குட்பட்ட காவல் நிலையத்தின் தொலைபேசி எண், ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆகியோரது தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்களை தவறாமல் பெற்றுக் கொண்டு, அவசர காலத்தில் அவர் களை தொடர்பு கொண்டு காவல் துறை தொடர்பான உதவிகள் பெறலாம்.
அடிக்கடி கண்காணிப்பு
- பள்ளிக்கூடங்களின் வெளியே திண்பண்டங்கள், ஐஸ்கிரீம் மற்றும் விளையாட்டு பொருட்களை விற்பவர்களை அவ்வப்போது, கண்காணிக்க வேண்டும்.
-
பள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலர் தவிர வேறு எவரேனும் மாண வர்களை அழைத்துச் செல்ல வந்தால், பெற்றோர் அல்லது பாது காவலர் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, உறுதி செய்த பின்னரே மாணவர் களை அவர்களுடன் அனுப்ப வேண்டும்.
-
பள்ளி வளாகங்களில் உள்ள நீச்சல் குளம் இருந்தால், அதனை சுற்றி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கண்காணிக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் காவல்துறை இணை ஆணையாளர்கள் பாஸ்கரன், சந்தோஷ்குமார், பிரேம் ஆனந்த் சின்ஹா, கே.பாவனீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பள்ளி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூடுதல் காவல் ஆணையர்கள் சங்கர், ஜெயராம், இணை ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, பவானீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.