அண்ணா பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழு: ஐஐடி முன்னாள் இயக்குநர் அனந்த பத்மநாபன் நியமனம்
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தேர்வுக் குழுவில் சிண்டிகேட் சார்பில் கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் கே.அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் எம்.ராஜாராமின் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு மே 26-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, புதிய துணை வேந்தரை தேர்வுசெய்ய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.பாஸ்கரன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த தேர்வுக்குழு பரிந்துரை செய்த 3 பேர் பட்டியலை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்துவிட்டார்.
துணைவேந்தரை தேர்வுசெய் வதற்கான தேர்வுக் குழுவில் ஆளுநர் சார்பில் ஒருவர், பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் ஒருவர், தமிழக அரசு சார்பில் ஒருவர் என 3 உறுப் பினர்கள் இடம்பெறுவர். ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர், தேர்வுக் குழுவின் அமைப்பாளராக செயல் படுவார்.
ஆலோசகர் பணி
இந்நிலையில், புதிதாக அமைக் கப்பட்டுள்ள தேர்வுக் குழுவில் ஆளு நர் சார்பில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.சி.லோதா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தற்போது பல் கலைக்கழக சிண்டிகேட் சார்பில் கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் கே.அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை முன்னாள் பேராசிரியரான அவர் தற்போது பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாட்டு மைய ஆலோசகராக பணியாற்றி வருகி றார்.
தமிழக அரசு சார்பில் ஒருவர்
அடுத்ததாக, தமிழக அரசு சார்பில் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அதன்பிறகு தேர்வுக் குழு, துணை வேந்தர் பதவிக்கு 3 நபர்களை பல்கலைக்கழக வேந்தரான ஆளுந ரிடம் பரிந்துரை செய்யும். அவர்களில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார்.